புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு பாஜ, என்.ஆர்.காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்ததும் பேட்டியளித்த பாஜவின் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கடந்த தேர்தலை போன்று இந்த தேர்தலிலும் என்.ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜ 14 தொகுதிகளிலும் போட்டியிடும்.
பாஜவுக்கு ஒதுக்கும் இடங்களில் அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சிக்கு நாங்களே பிரித்துக் கொடுப்போம் என அறிவித்தார். ஆனால், கூட்டணியை உறுதி செய்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை உறுதி செய்யவில்லை.
பேச்சுவார்த்தையின் போது, தேஜ கூட்டணியில் லஜகவை சேர்க்க கூடாது என ரங்கசாமி நிபந்தனை விதித்து இருந்தார். ஆனால் நிர்மல்குமார் சுரானா, கூட்டத்துக்கு பின்னர் லஜக இடம்பெறும், அவர்களுக்கு சீட்டுகளை நாங்கள் ஒதுக்கி தருவோம் என்று கூறியது ரங்கசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், யாருக்கு, எந்த தொகுதி என்பது குறித்து பேச ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தார்.
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு என்.ஆர்.காங்கிரசை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் ரங்கசாமி நேரடியாக கலந்துகொள்ளவில்லை. அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தார். இக்குழுவினர் தனியார் ஓட்டலில் பாஜ பொறுப்பாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘‘மாநில அந்தஸ்து தொடர்பாக பிரதமர் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். எல்ஜேகே கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இதை ஏற்றால்தான் கூட்டணி தொடரும்’’ என அக்குழுவினர் தெரிவித்தனர். இதற்கு பாஜ தரப்பில், ‘‘5 ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்து விட்டு, இப்போது கூட்டணிக்கு நிபந்தனை விதிப்பதா? உங்களது பேச்சு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. மாநில அந்தஸ்து ஒரே நாளில் செய்யக்கூடியதுதானா?’’ எனக்கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.
இதற்கு ரங்கசாமி தரப்பில், ‘‘கூட்டணியை முறித்துக்கொணடு, தனித்து போட்டியிட தயாராக உள்ளோம்’’ என பதிலளித்துள்ளனர். இதனால் எந்த முடிவு எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது. நேற்று காலையும் என்.ஆர் காங்கிரஸ்- பாஜ தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டது. இதற்காக ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜ மாநில தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் காத்திருந்தனர்.
ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முதல்வர் உள்ளிட்ட யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. பலமணி நேரம் காத்திருந்த பாஜவினர் கடும் விரக்தியடைந்தனர். இதற்கு மேல் இங்கே பேசி பலனில்லை என முடிவு செய்தனர். தொடர்ந்து இந்த விவகாரத்தை பாஜ தலைமைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘தேர்தலுக்கு எப்போதும் தயாராக உள்ளோம். கூட்டணி யாருடன் எப்போது சொல்ல வேண்டுமோ அப்போது சொல்வோம். கோயிலுக்கு செல்கிறேன். தற்போதைக்கு ஒன்றும் இல்லை’’ என்றார். பாஜ மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, சபாநாயகர் செல்வம், பாஜ மாநில தலைவர் ராமலிங்கம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ரங்கசாமியின் நிபந்தனைகள் குறித்து தெரிவிக்கவுள்ளனர். டெல்லியில் இருந்தபடி ரங்சாமியுடன், அமித்ஷா தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், அதன்பிறகே சுமுக முடிவு எட்டப்படும்’’ என்றார். புதுச்சேரியில் பாஜ – என்.ஆர் காங்கிரஸ் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தனது கோரிக்கைகளை பாஜ ஏற்க மறுத்தால் தேஜ கூட்டணியை விட்டு வெளியேற முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார்.
இது போன்ற சூழலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ள தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க ரங்கசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், தவெக பொதுச்செயலாளருமான புஸ்சி ஆனந்த் இது தொடர்பாக ரங்கசாமியிடம் பேசியுள்ளார். தொடர்ந்து விஜய்யிடம் தொலைபேசியியில் பேசி, அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர் என அக்கட்சி தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் பாஜ-என்.ஆர்.காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த கூட்டணியில் உள்ள பாமகவும் 30 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திசையில் பயணிக்க உள்ளது தொண்டர்களிடயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* லாட்டரி அதிபர் மகன் தனித்து போட்டியிட முடிவு
லாட்டரி அதிபர் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கிய லஜகவை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என முதல்வர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் 30 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது குறித்து அக்கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், ஆரம்பத்தில் இருந்தே எல்ஜேகே தனித்து களம் காணும் வகையில்தான் நம்முடைய அரசியல் பயணத்தை திட்டமிட்டோம்.
ஒன்றிய அரசுடன் இணக்கமாக சென்றால்தான் மாநிலத்துக்கு நல்லது என முடிவு செய்து தேஜ கூட்டணிக்கு செல்ல முடிவு செய்தோம். தற்போதைய அரசியல் நிலவரத்தால் தனித்தே போட்டியிடலாம். 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் லஜகவின் வேட்பாளர்கள் உள்ளனர் என நிர்வாகிகள் ஆவேசமாக கூறினர். இதை கேட்ட சார்லஸ் வரும் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று முடிவுக்கு வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
