சொன்னாரு: திமுக அரசின் 2021 தேர்தல் அறிக்கையில் ‘பனை வெல்லம் கொள்முதல் மற்றும் விற்பனை’ என்ற பாரம்பரிய வாழ்வாதாரம் சார்ந்த மிக முக்கியமான வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
செஞ்சாரு: தமிழகத்தின் மாநில மரமான பனை மரம், ‘கற்பகத்தரு’ என்று அழைக்கப்படுகிறது. பனைத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த காலங்களில் போதிய ஆதரவின்றி நலிவடைந்து வந்த இத்தொழிலை மீட்டெடுக்க, திமுக ஒரு முக்கிய வாக்குறுதியை அளித்தது. அதன்படி, பனை வெல்லத்தை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் வெள்ளைச் சர்க்கரையின் ஆதிக்கத்தாலும், போலி கருப்பட்டி (சர்க்கரை கலந்த கருப்பட்டி) புழக்கத்தாலும் பனைத் தொழிலாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
தங்களின் உற்பத்திப் பொருளுக்குச் சரியான விலை கிடைக்காமல் பனை மரங்களை வெட்டும் நிலை உருவானது. இதனைத் தடுக்க, அரசு தலையிட்டு நிலையான விலையை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இந்த வாக்குறுதி உருவாக்கப்பட்டது. அதன்படி, 2021-22ம் ஆண்டின் முதல் வேளாண் நிதி நிலை அறிக்கையில் இந்த வாக்குறுதி அறிவிக்கப்பட்டு அதே ஆண்டு அக்டோபர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நியாயவிலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பனை வெல்லம் நியாயவிலைக் கடைகளில் ‘கற்பகம்’ என்ற பெயரிலும், கூட்டுறவுத் துறை பல்பொருள் அங்காடிகளில் ‘கரும்பனை’ என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 354 முதன்மை பனை வெல்லம் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் இத்திட்டத்தின் மூலம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பனை வெல்லம் மற்றும் விற்பனை வாரியம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தொழிலாளர்களிடமிருந்து நேரடியாகப் பனை வெல்லம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதன் பின்னர், கொள்முதல் செய்யப்படும் பனை வெல்லம் எவ்வித கலப்படமும் இன்றி இருப்பதை உறுதி செய்ய தரப்பரிசோதனை செய்யப்பட்டு இடைத்தரகர்கள் இன்றி அரசு விற்பனை செய்வதால், மக்களுக்குக் குறைந்த விலையிலும், தொழிலாளர்களுக்கு அதிக லாபமும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பனை ஏறும் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் பெறுகின்றனர்.
தற்போது பொங்கல் பரிசு தொகுப்புகளிலும் பனை வெல்லம் வழங்கும் முயற்சி எடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இதனைத் தடையின்றி கிடைக்க செய்ய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், பனை வெல்லத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் (மிட்டாய், காபித்தூள்) தயாரிக்கவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பனை வெல்லம் கொள்முதல் என்ற ஒரு சிறிய வாக்குறுதி, தமிழகத்தின் பாரம்பரிய அடையாளத்தை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறப் பொருளாதாரத்தைச் சீரமைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, இயற்கை விவசாயம் மற்றும் தமிழரின் ஆரோக்கியம் சார்ந்த ஒரு தொலைநோக்கு திட்டமாகும்.
