×

கூட்டணி வண்டி இன்னும் வரல… கட்சி தாவும் ராமதாஸ் நிர்வாகிகள்

 

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதையடுத்து 2 மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதி பங்கீட்டை முடித்து வேட்புமனு தாக்கலுக்கு ஒவ்வொரு கட்சியும் தயாராகி வருகின்றன. ஆனால் ராமதாஸ் தலைமையிலான பாமக அணி இதுவரை கூட்டணியை அறிவிக்கவில்லை. சசிகலாவை தவிர மாற்றுக் கட்சியினர் தைலாபுரம் தோட்டத்துக்கு கூட்டணி பேச வராத நிலையில், கடைசியாக தவெக கதவும் மூடப்பட்டதால் நெருக்கடியான சூழலுக்கு ராமதாஸ் தள்ளப்பட்டு உள்ளார்.

தேர்தலை புறக்கணிக்கும் முடிவை அவர் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்த நிலையில், செயல் தலைவரான காந்தியோ யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என தொடர்ந்து கூறிவருகிறார். கூட்டணி பற்றி கவலைப்படாமல் விருப்பமனு அளித்தவர்கள் மனுதாக்கல் செய்ய தயாராக இருக்குமாறு தைலாபுரத்தில் இருந்து சமிக்கை கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால் கூட்டணியை ராமதாஸ் அறிவிக்காததால், யாரும் ஆர்வம் காட்டாத நிலையைத்தான் தற்போது வரையிலும் காண முடிவதாக அக்கட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

குறிப்பிட்ட சில நிர்வாகிகளின் கருத்துக்கு மட்டுமே ராமதாஸ் செவிசாய்த்துவரும் நிலையில் அப்செட்டில் உள்ள 2ம் மட்ட நிர்வாகிகள் அன்புமணி தரப்பில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாகவும், திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் சேர்வது பற்றியும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தொண்டர்களும் தேர்தல் களப்பணிகளில் சோர்வடைந்து உள்ளனர். இதேபோல் புதுச்சேரியில் உள்ள ராமதாஸ் ஆதரவு பாமக தரப்பினரும் எந்த நிலைப்பாடும் எடுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ராமதாஸ் சொன்ன கூட்டணி வண்டி வருவதற்குள் நமக்கு தேர்தலே முடிந்துவிடும் போல என்று கட்சியினரே கிண்டலடித்து வருகின்றனர்.

Tags : Ramadoss ,Election Commission ,Tamil Nadu ,Puducherry ,PMK ,
× RELATED தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி...