×

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் அதிமுக-பாஜ தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி: பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி

 

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் அதிமுக – பாஜ இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படாமல், இழுபறி நீடிப்பதால் பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, பாரிவேந்தரின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதில் சில கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளன. சில கட்சிகள் பாஜவுடன் கூட்டணியில் உள்ளன. அதனால், அதிமுகவிடம் இருந்து பாஜ இடங்களை பெற்று, சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் குழப்பம் நீடிக்கிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், அதிமுக கூட்டணியில் எத்தனை இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆனபிறகும், அதிமுக – பாஜ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாமல் தொடர்ந்து இழுபறியே நீடிக்கிறது. இதனால், இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாமக (அன்புமணி), அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதிமுக – பாஜ ஆகிய பெரிய கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டால்தான் தங்களுக்கு சீட் ஒதுக்கப்படும் என்பதால், அவர்கள் தேர்தல் பணிகளை தொடர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அதேநேரம், அதிமுக தலைமைக்கு பாஜ மேலிடம் தொடர்ந்து மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பிட்ட தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று பாஜ மேலிடம் கண்டிப்புடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் தெரிவித்து விட்டது. அதனால், அதிமுகவினர் போட்டியிடலாம் என்று கூறப்பட்ட பல தொகுதிகளை பாஜவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதும், தொகுதி பங்கீடு இழுபறிக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது கூட்டணி கட்சிகளுக்கு விரைவில் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் எடப்பாடி தள்ளப்பட்டுள்ளார்.

பாஜ மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அதிமுக தலைமையிடம், ”தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. விரைவில் தொகுதி பங்கீட்டை முடியுங்கள். அப்போதுதான், கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும்” என்று வலியுறுத்தி வருகின்றனர்.  இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் முழுமையாக வெளியிடப்படும். கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கலந்து பேசி தொகுதி பங்கீட்டையும் விரைவில் இறுதி செய்வோம். அதன்பிறகு யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்கிற விவரங்கள் வெளியிடப்படும்” என்றார்.

Tags : Palamaka ,Ammuga ,Tamaga ,Atamuga-Baja ,Tamil Legislative Assembly ,Chennai ,Tamil Nadu ,Adimuka ,Baja ,Dimuka ,
× RELATED திமுக-இந்திய கம்யூ. இடையே நாளை 4ம் கட்ட பேச்சு