×

நியூசி. உடன் முதல் டி20 தெறிக்க விட்ட தென் ஆப்ரிக்கா

மவுங்கானுய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமர்க்கள வெற்றியை பதிவு செய்துள்ளது. தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. மவுங்கானுய் நகரில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் நியூசி – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய அந்த அணியின் டெவான் கான்வே 1 ரன்னிலும், டாம் லாதம் 7 ரன்னிலும் அடுத்தடுத்து வீழ்ந்து அதிர்ச்சி அளித்தனர். பின் வந்த வீரர்களில் ஜேம்ஸ் நீஷம் 26, கேப்டன் மிட்செல் சான்ட்னர் 15, கோல் மெக்கொன்சி 15 ரன் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கங்களில் அவுட்டாகி நடையை கட்டியதால், 14.3 ஓவரில் நியூசி. 91 ரன்னுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா தரப்பில் கொபானி மொகோனா 3, ஜெரால்ட் கோட்ஸீ, ஓட்னில் பார்ட்மேன், கேஷவ் மஹராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

அதையடுத்து, 92 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான டோனி டி ஜோர்ஸி 2 ரன்னில் வீழ்ந்தபோதும் மற்றொரு துவக்க வீரர் கானர் எஸ்டெர்ஹுஸென் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 45 ரன் விளாசினர். அந்த அணியின் ரூபின் ஹெர்மான் 7, ஜேசன் ஸ்மித் 10, டியான் பாரஸ்டர் ஆட்டமிழக்காமல் 16 ரன் எடுத்தனர். 16.4 ஓவரின் தென் ஆப்ரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன் குவித்தது. அதனால், 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்த அந்த அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Tags : New Zealand ,South Africa ,Maunganui ,T20 ,
× RELATED பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா F1 Grands Prix...