×

சில்லி பாய்ன்ட்…

* கேகேஆரில் இடம்பெற்ற முஸரபானி மீது வழக்கு?
லாகூர்: ஐபிஎல்லில் இடம்பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். அவருக்கு மாற்று வீரராக, ஜிம்பாப்வேயை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிளெஸிங் முஸரபானியை, கொல்கத்தா அணி சேர்த்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இடம்பெற்றுள்ள இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் ஏற்கனவே முஸரபானி ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஒப்பந்த விதிமுறையை மீறியதற்காக முஸரபானி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* நீளம் தாண்டுதலில் லோகேஷ் சாதனை
ஃபேயட்வில்லி: அமெரிக்காவின் ஆர்கன்ஸாஸில் உள்ள ஃபேயட்வில்லி நகரில் நடந்த என்சிஏஏ உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வம்சாவளி வீரர் லோகேஷ் சத்யநாதன், நீளம் தாண்டும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 8.21 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம், புதிய உள்ளரங்க தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார். நீளம் தாண்டும் போட்டிகளில் இதுவரை சாதனை படைத்த இந்திய வீரர்களில் 3வது அதிகபட்ச தூரம் தாண்டிய சாதனையை லோகேஷ் படைத்துள்ளார். இதற்கு முன்பு நடந்த போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.42 மீட்டர், முரளி சங்கர் 8.41 மீட்டர் தூரம் தாண்டி சாதனை படைத்துள்ளனர்.

* மயங்க் சக்ரவர்த்தி 94ம் கிராண்ட் மாஸ்டர்
புதுடெல்லி: அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த 17 வயது செஸ் வீரர் மயங்க் சக்ரவர்த்தி இந்தியாவின் 94வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுப்பது இதுவே முதல் முறை. ஃபர்ஸ்ட் ஓட்டல்ஸ் செஸ் டேலன்ட்ஸ் போட்டிகளின்போது, சுவீடனை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் பிலிப் லின்ட்கிரெனை வீழ்த்தியதை அடுத்து, கிராண்ட் மாஸ்டர் கவுரவம் மயங்க் சக்ரவர்த்திக்கு கிடைத்துள்ளது. இப்போட்டிகளின்போது, 8வது சுற்றில் 6.5 புள்ளிகளை அவர் பெற்றார்.

Tags : Muserabani ,KKR ,Lahore ,Mustaphisur Rahman ,Kolkata Knight Riders ,IPL ,Zimbá ,Blazing Musarabani ,
× RELATED சில்லி பாய்ன்ட்…