- உலகக் கோப்பைகள்
- பிசிசிஐ நாமன் விருதுகள்: விருதுகள்
- சுப்மான் கில்
- Mandana
- மும்பை
- சூர்யகுமார் யாதவ்
- உலகக் கோப்பை டி20 சாம்பிய
- பிசிசிஐ நமன் விருதுகள்
மும்பை: மும்பையில் இன்று நடக்கும் பிசிசிஐ நமன் விருதுகள் விழாவில், உலகக்கோப்பை டி20 சாம்பியன் பட்டம் வென்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கவுரவிக்கப்பட உள்ளது. பிசிசிஐ நமன் விருதுகள், முந்தைய ஆண்டில் உள்நாடு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2025ல் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கான நமன் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் இன்று நடைபெற உள்ளது.
இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, சமீப கால போட்டிகளில் ஐசிசி சாம்பியன் பட்டம் வென்ற 5 இந்திய கிரிக்கெட் அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கவுரவிக்க உள்ளது. அதற்கேற்ப, கடந்த 2025ல் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய ஆடவர் அணி, 19 வயதுக்கு உட்பட்ட ஆடவருக்கான உலகக்கோப்பை, 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணிகள், சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை டி20யில் சாம்பியன் பட்டம் வென்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆகியவை, இன்றைய விழாவில் கவுரவிக்கப்பட உள்ளன.
தவிர, ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக வழங்கப்படும் பல்வேறு விருதுகள் இன்றைய விழாவில் அளிக்கப்பட உள்ளன. இந்திய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில்லுக்கு, சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்படும். அதேபோல், சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருது, இந்திய அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதை 5வது முறையாக அவர் பெறவுள்ளார்.
* ராகுல் டிராவிட், பின்னிக்கு
வாழ்நாள் சாதனையாளர் விருதுபிசிசிஐ நமன் விருதுகள் விழாவில் இன்று, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் ஜாம்பவான் வீரர்களான ராகுல் டிராவிட், ரோஜர் பின்னி ஆகியோருக்கு, பிசிசிஐயின் மிக உயரிய விருதாக கருதப்படும், கலோனல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இந்திய அணி முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜுக்கு, மகளிருக்கான பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பின்னி, கடந்த 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
பின்னர், இந்திய அணியின் பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும், கடந்த 2022 – 2025 ஆண்டுகளில் பிசிசிஐ தலைவராகவும் செயல்பட்டுள்ளார். ராகுல் டிராவிட், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 24,000 ரன்கள் குவித்துள்ளார். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை வழிநடத்தி அவர்களின் கிரிக்கெட் வாழ்வை செழுமைப்படுத்தியவராக ராகுல் டிராவிட் திகழ்கிறார். கடந்த 2024ல் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார்.
* ஆயுஷ் மாத்ரேவுக்கு லாலா அமர்நாத் விருது
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு உள்ளூர் குறைந்த ஓவர் போட்டிகளில் சிறந்த ஆல் ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருது வழங்கப்பட உள்ளது. விதர்பா அணியை சேர்ந்த ஹர்ஷ் தூபேவுக்கு, ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறந்த ஆல் ரவுண்டருக்கான விருது அளிக்கப்பட உள்ளது. உள்ளூர் போட்டிகளில் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக திகழ்ந்தோருக்கு வழங்கப்படும் ஜக்மோகன் டால்மியா கோப்பை ஐரா ஜாதவுக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் சிறந்த வீராங்கனை விருது, ஷபாலி வர்மாவுக்கு வழங்கப்பட உள்ளது.
