மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கிய படந்தால் சந்திப்பு டோல்கேட் நிர்வாகம் அலட்சியம்

சாத்தூர், பிப். 11: சாத்தூர் படந்தால் சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்குக்கு, டோல்கேட் நிர்வாகம் மின்கட்டணம் கட்டாததால், மின்வாரியம் மின் இணைப்பை துண்டித்துள்ளது. இதனால், படந்தால் சந்திப்பு மீண்டும் இருளில் மூழ்கியுள்ளது. சாத்தூர் படந்தால் சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் ஹைமாஸ் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைமாஸ் மின்விளக்கு கடந்தாண்டு வரை சரியாக எரியவில்லை. இதை சீரமைக்கக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இது தொடர்பாக, ஒரு கட்சியின் நகரச் செயலாளர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், மதுரை திட்ட இயக்குனர் நிதிமன்றத்தில் ஆஜராகி, புதிய உயர்மின்கோபுரத்தில் லைட் எரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பின் கடந்த ஆறுமாதமாக ஹைமாஸ் விளக்கு எரிந்து வந்தது.

இந்நிலையில், மின்கட்டணம் கட்டாததால், சில தினங்களுக்கு முன், ஹைமாஸ் மின் இணைப்பை மின்வாரியம் துண்டித்துள்ளது. இதனால், இந்தப் பகுதி வழியாக நடந்து செல்லும் அண்ணாநகர், படந்தால், ரெங்கப்பன்நயக்கன்பட்டி கிராம மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இச்சந்திப்பில்தான் சாத்தூரில் இருந்து மதுரை, சென்னை செல்லும் பஸ்கள் நின்று செல்கின்றன. இதனால், வெளியூர் செல்லும் பொதுமக்கள் இருளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘ஹைமாஸ் மின்விளக்கு சாத்தூர் டோல்கேட் கட்டுபாட்டில் உள்ளது. அவர்கள்தான் மின்கட்டணம் கட்ட வேண்டும் என்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, படந்தால் சந்திப்பில் ஹைமாஸ் மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: