கண்டாச்சிபுரம் அருகே ஓசி டீ கொடுக்காததால் டீக்கடைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த முதியவர் கைது

திருக்கோவிலூர், மார்ச் 13: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே ஓசி டீ தராததால் டீக்கடைகாரர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.கண்டாச்சிபுரம் அடுத்த குளிர்சுனை கிராமத்தை சேர்ந்தவர் இப்ராஹிம் மகன் அப்துல் பாரி(62), இவர் தங்கை வீட்டுகாரருக்கு சொந்தமான கீழ்வாலை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கட்டிடத்தில் ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்த அப்துல் மாலிக் மகன் இத்ரீஸ் அலி(42), என்பவர் வாடகைக்கு டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அப்துல் பாரி தினமும் பணம் கொடுக்காமல் ஓசியில் டீ வாங்கி குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஓசி டீ தராததால் அப்துல் பாரி கோபமடைந்து, இத்ரீஸ் அலி மீதும் அவரது இருசக்கர வாகனத்தின் மீதும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பி சென்றார். இதில் பலத்த தீக்காயமடைந்த இத்ரீஸ் அலிக்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து அப்துல் பாரியை(62), நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: