மேல்மலையனூர், மார்ச் 13: செஞ்சி டிஎஸ்பி அலுவலகத்தில் கட்டிட மேஸ்திரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல்மலையனூர் அடுத்த பொற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் ராஜா என்பவரிடம் 1 ஏக்கர் விவசாய நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் ராஜாவிற்கும் அன்புக்கும் இடையே இடம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அன்பு வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் ராஜா தொடர்ந்து அன்புவுடன் வாக்குவாதம் செய்தாராம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அன்பு மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி, மகள் புனிதா ஆகியோர் குடும்பத்துடன் நேற்று மாலை செஞ்சி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று, உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த காவலர்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
