6,500 மாணவிகளுக்கு ஹெச்.பி.வி., தடுப்பூசி

தர்மபுரி, மார்ச் 12: தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 6,500 பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1.2 லட்சம் பெண்களுக்கு கர்ப்பபைவாய் புற்றுநோய் பாதிப்பு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பெண்களை தாக்கும் புற்றுநோய்களில் மார்பக மற்றும் கர்ப்பபைவாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது. அதிலும் குறிப்பாக தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெச்பிவி வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கர்ப்பபைவாய் புற்றுநோயை, ஹெச்பிவி தடுப்பூசி செலுத்துவதின் மூலம் தடுக்க முடியும். இந்த பாதிப்பை தடுக்கும் வகையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் முதற்கட்டமாக தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய 4 மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 வயதுடைய மாணவிகளுக்கு, ஹெச்பிசி தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், `கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை தடுக்க தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் மொத்தமாக 27 ஆயிரம் பள்ளி மாணவிகள் கணக்கெடுக்கப்பட்டு, அதில் 81 சதவீதம் அளவுக்கு ஹெச்பிவி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 6,500 மாணவிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் 2,150 மாணவிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 10,300 மாணவிகள், அரியலூர் மாவட்டத்தில் 3,100 மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: