- காஞ்சிபுரம்
- சினேகா
- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
- TNPSC
- காஞ்சிபுரம் மாவட்டம்
- காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு…
காஞ்சிபுரம், மார்ச் 13: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான (டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வு) முதன்மை எழுத்து தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு, கலெக்டர் சினேகா அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன் விவரம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் வருகின்ற 15.03.2026 அன்று தொகுதி-II மற்றும் தொகுதி-IIAக்கான எழுத்துத் தேர்வுகள் காலை மற்றும் மதியம் இருவேளைகளிலும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்கள், முற்பகல் (OMR முறை) தேர்விற்கு காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று, பிற்பகல் (Descriptive முறை) தேர்விற்கு 2 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். காலதாமதமாக வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு எழுதுபவர் அனுமதிச்சீட்டில் (Hall Ticket) உள்ள அறிவுரைகளை கவனமாக படித்து, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு உபயோகப் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் தேர்வு முடிவதற்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
