செங்கல்பட்டு, மார்ச் 11: மகேந்திரா சிட்டியில் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணி விழிப்புணர்வு முகாமில் தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால் பங்கேற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்து கால தற்காப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வீரராகவன்(மகேந்திரா சிட்டி), கார்த்திகேயன்(மறைமலைநகர்) தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து அல்லது இதர விபத்துகள் ஏற்படும்போது, பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் நேரடி செய்முறை விளக்கம் அளித்தனர். குறிப்பாக, கட்டிடத்தின் மேல் தளங்களில் சிக்கிக்கொண்டவர்களை நவீன உபகரணங்கள் மற்றும் கயிறுகள் உதவியுடன் காயமின்றிப் பாதுகாப்பாகக் கீழே இறக்குவதை வீரர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர். மேலும், தீப்பற்றும்போது அதைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் முதலுதவி சிகிச்சை குறித்தும் விரிவாக விளக்கமளித்தனர். இந்த விழிப்புணர்வு முகாமைக் கண்ட அந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வீரர்களின் மீட்புப் பணிகளை ஆர்வத்துடன் சூழ்ந்து நின்று கவனித்தனர். அவசர காலங்களில் பதற்றமின்றி செயல்பட இத்தகைய முகாம்கள் தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
