×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 30,563 மாணவர்கள் எழுதினர்

செங்கல்பட்டு, மார்ச் 12: தமிழகம் முழுவதும் நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி, ஏப்ரல் 6 ம் தேதி வரை நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் என 363 பள்ளிகளைச் சேர்ந்த 14,983 மாணவர்கள், 15,239 மாணவிகள் என மொத்தம் 30,222 பேர், 113 தேர்வு மையங்களில் நேற்று காலை 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத தொடங்கினர். இதில், 661 மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலன் கருதி, சொல்வதை எழுதுபவர் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வினை எவ்வித முறைகேடுகளுமின்றி சிறப்பாக நடத்துவதற்காக, முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முறைகேடுகளைத் தடுக்க 151 பேர் கொண்ட நிலையான படை உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல 24 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலன் 10ம் வகுப்பு தேர்வு நடந்த மையங்களில் திடீரென ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது கலெக்டருடன் மாவட்ட கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் என 184 பள்ளி மாணவ, மாணவிகளுக்காக 69 பள்ளிகளில் தேர்வு எழுதும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 69 தேர்வு மையங்களில் 7,641 மாணவர்களும், 7,768 மாணவிகளும் என மொத்தம் 15,324 பேர், நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுததினர். 85 பேர் தேர்வு எழுத வரவில்லை. 69 தேர்வு மையங்களுக்கும் 60 முதன்மை கண்காணிப்பாளர்களும், மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 5 பறக்கும் படை சோதனை குழுவினர், பள்ளிக்கல்வி தேர்வுத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை, கலெக்டர் சினேகா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் நளினி, கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Chengalpattu ,Kanchipuram ,Tamil Nadu ,
× RELATED மாமல்லபுரம் அரசு மருத்துவமனை சாலையை ஆக்கிரமித்து பைக்குகள் நிறுத்தம்