பெரும்புதூர், மார்ச் 12: சுங்குவார்சத்திரம் அருகே சித்தூர் – தர்காமேடு சாலை ஆக்கிரமிக்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சாலை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்தனர். பெரும்புதூர் ஒன்றியம், சந்தவேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தூர் கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல சித்தூர் – தர்காமேடு இணைப்புச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த, இணைப்புச்சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், தார் சாலையான இச்சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து, பல பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சித்தூர் – தர்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என சித்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, சித்தூர் – தர்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க, முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, சாலை சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், இச்சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தனிநபர் ஒருவர் தனது நிலத்திற்கு எதிரே சித்தூர்- தர்காமேடு சாலையில் ேநற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 50 அடி நீளத்திற்கு பள்ளம் தோண்டியதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால் சாலை சீரமைப்பு பணிகளும் நிறுத்தப்பட்டன.
இதனால், சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சித்தூர் பகுதி பொதுமக்கள் சார்பில், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் சாலையை அளவீடு செய்ய வருவாய்த்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பெரும்புதூர் வட்டாட்சியர் வசந்தி தலைமையிலான வருவாய்த்துறையினர், சுங்குவார்சத்திரம் போலீசார் முன்னிலையில் சித்தூர் – தர்காமேடு இணைப்புச் சாலையை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான பள்ளம் தோண்டிய இடம் பொதுப்பாதை என்பது தெரியவந்தது. இதையடுத்து சாலையில் பள்ளம் தோண்டிய நபரை எச்சரித்த வட்டாட்சியர் வசந்தி, சாலை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிச் சென்றார். இச்சம்பவதால் பெரும் பரபரப்பு நிலவியது.
