×

தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரே கப்பலில் இருந்து 147 காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை

தூத்துக்குடி : தூத்துக்குடி வஉசி துறைமுகம் நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே கப்பலில் இருந்து 147 காற்றாலை இறகுகளை கையாண்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.இதுதொடர்பாக தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம் ஒரே கப்பலில் இருந்து 147 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாண்டுள்ளது. இதன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டினை அதிகரிக்கும் சரக்குகள் கையாளுதலில் புதிய சாதனையைப் இத்துறைமுகம் படைத்துள்ளது.

இதுவரை இந்தியாவின் அனைத்து துறைமுகங்களிலும் ஒரே கப்பலில் இருந்து கையாளப்பட்ட காற்றாலை இறகுகளின் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகமாகும்.

இதற்கு முன்பு 21.11.2025 அன்று தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒரே கப்பலில் 103 காற்றாலை இறகுகள் கையாளப்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனை, இந்தியாவின் பசுமை ஆற்றல் முயற்சிகளை ஆதரிப்பதில் வஉசி துறைமுகத்தின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.

சுமார் 76 மீட்டர் நீளமுள்ள இந்த 147 காற்றாலை இறகுகளும் ‘எம்வி போ ரன் ஜூ சூயோ’ என்ற கப்பல் மூலம் சீனாவின் குயின்சோ துறைமுகத்தில் இருந்து கடந்த 3ம்தேதி அன்று வஉசி துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த சரக்குகளின் இறக்குமதி பணிகள் கடந்த 3ம்தேதி அன்று நிறைவடைந்தது.வஉசி துறைமுகம் இந்த நிதியாண்டில், பிப்ரவரி 2026 வரை, 4,211 காற்றாலை இறகுகளை கையாண்டுள்ளது. இது கடந்த நிதியாண்டு பிப்ரவரி 2025 வரை கையாளப்பட்ட 2,395 காற்றாலை இறகுகளுடன் ஒப்பிடுகையில் 75.82 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

நாட்டிலேயே காற்றாலை இறகுகளை அதிகளவில் கையாளும் முன்னணி துறைமுகமான வஉசி துறைமுகம் தனது உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது.

காற்றாலை இறகுகளை சேமிக்க துறைமுகத்தின் உள்பகுதியில் 60 ஆயிரம் சதுர மீட்டர் கூடுதல் சேமிப்பு பரப்பளவும், துறைமுகத்தின் வெளிபுறத்தில் மேலும் 1.80 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவும் உருவாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thoothukudi Port ,Thoothukudi ,Thoothukudi VOC Port ,Thoothukudi VOC Port Authority ,Susantha Kumar Purohit ,Thoothukudi… ,
× RELATED உடுமலையில் சார் பதிவாளர் அலுவலகம்...