×

குன்னூர் ரயில்வே குடியிருப்பு பகுதியில் அபாயகர கற்பூர மரங்களை அகற்றும் பணி தீவிரம்

குன்னூர் : குன்னூர் ரயில்வே குடியிருப்புகளைச் சூழ்ந்திருந்த அபாயகரமான கற்பூர மரங்களை அகற்றும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.நீலகிரி மாவட்டம்​ குன்னூர் ரயில்வே குடியிருப்பு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியைச் சுற்றி கடந்த சில காலமாக அடர்ந்த புதர்களும், முதிர்ந்த கற்பூர மரங்களும் வளர்ந்து காணப்பட்டன.​ அடர்ந்த புதர்கள் மற்றும் மரங்களால் அந்த பகுதியில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டம் காணப்பட்டதுடன், பலத்த காற்று மற்றும் மழைக்காலங்களில் மரங்கள் விழுந்து விபத்து ஏற்படும் அச்சமும் இருந்து வந்தது.

எனவே பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியினர் ரயில்வே துறைக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.​ பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், முதற்கட்டமாக குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த 27 அபாயகரமான கற்பூர மரங்களை வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. ​

மரங்கள் அகற்றப்பட்டு வருவதை தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகளில் வளர்ந்துள்ள தேவையற்ற புதர்களையும் அகற்றும் பணி விரைவில் நடைபெற உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Coonoor Railway Residential Area ,Coonoor ,Railway Administration ,Nilgiris District ,
× RELATED சென்னை வால்டாக்ஸ் சாலையில் ரூ.18.42...