*பத்திரப்பதிவு செய்து தராததால் ஆத்திரம்
உடுமலை : பத்திரப்பதிவு செய்து தராததை கண்டித்து உடுமலை சார்பதிவாளர் அலுவலக கேட்டின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதே வீதியில் நீதிமன்றம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், வங்கிகள் என ஏராளமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பத்திரப்பதிவு அலுவலகம் தினசரி மாலை 6 மணி வரையும், முகூர்த்த நாட்களில் இரவு 8 மணி வரையும் இயங்குவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தை பூட்டிச் சென்றபிறகு, இரும்பு கேட்டின் முன்பு தீப்பிடித்து எரிந்தது. விசாரணையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த சார் பதிவாளர் தினேஷ் உடுமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உடுமலை பெரியகடை வீதியை சேர்ந்த லோகேஷ் (28) என்பவர், பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: லோகேஷ் பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கராக இருந்து வருகிறார். பத்திரப்பதிவுக்கு வருபவர்களிடம் ஆவணங்களை பெற்று அலுவலர்களிடம் கொடுத்து வந்துள்ளார். அதன்படி, 20 ஏக்கர் நிலம் ஒன்றை விற்பனை செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்துள்ளார். ஆனால், ஆவணங்கள் சரியாக இல்லாததால், பத்திரப்பதிவு செய்ய முடியாது என சார்பதிவாளர் கூறியுள்ளார்.
பலமுறை லோகேஷ் வலியுறுத்தியும் மறுத்துவிட்டார்.இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் குடிபோதையில், பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி பத்திரப்பதிவு அலுவலக கேட் முன்பு வைத்து தீ வைத்துள்ளார். பின்னர், காவல் நிலையம் சென்று சரண் அடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
