×

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைத்தது தூத்துக்குடி வஉசி துறைமுகம்..!!

தூத்துக்குடி: இந்தியாவிலேயே ஒரே கப்பலில் அதிக காற்றாலை இறகுகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. சீனாவின் சின்சோ துறைமுகத்தில் இருந்து வந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த 147 காற்றாலை இறகுகள் வெற்றிகரமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இறக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் 147 காற்றாலை சிறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2025ம் ஆண்டு நவ. 21ம் தேதி ஒரே கப்பலில் 103 காற்றாலை சிறகுகளைக் கையாண்டதே சாதனையாக இருந்து வந்தது.

சீனாவின் ’சின்சோ’ துறைமுகத்திலிருந்து ’எம்.வி. போ ரன் ஜியூ சோ’ என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட, தலா 76 மீட்டா் நீளமுள்ள இந்த 147 சிறகுகளும் மாா்ச் 8ம் தேதி இறக்கி முடிக்கப்பட்டன. இந்த நிதியாண்டில் பிப். 2026 வரை வ.உ.சி துறைமுகம் மொத்தம் 4,211 காற்றாலை சிறகுகளைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் (2,395 சிறகுகள்) ஒப்பிடுகையில் 75.82 % வளா்ச்சியாகும். காற்றாலை சிறகுகளைக் கையாளுவதில் இந்தியாவின் முன்னணி துறைமுகமாகத் திகழும் வ.உ.சி துறைமுகம், தனது உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி வருகிறது.

துறைமுகத்தின் உள்பகுதியில் 60,000 சதுர மீட்டா் கூடுதல் சேமிப்பு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மேலும் 1,80,000 சதுர மீட்டா் பரப்பளவு சேமிப்பு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல்சாா் துறையை உருவாக்க இத்துறைமுகம் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக துறைமுக ஆணையத்தின் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் தெரிவித்துள்ளாா்.

Tags : Tuthukudi Wauxi ,Thoothukudi ,Toothukudi ,India ,U. C. ,Xinzhou, China ,Tuticorin ,Port C. ,
× RELATED உடுமலையில் சார் பதிவாளர் அலுவலகம்...