போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 36 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாங்கூழ் மற்றும் மாங்கனி ஏற்றுமதி மூலம் பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணி கிடைத்து வருகிறது.
ஆனால். கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காமல் நஷ்டத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்தாண்டு மா விலை சரிந்ததால், சில விவசாயிகள் மா மரங்களை அடியோடு வெட்டி மாற்று பயிருக்கு மாறினர்.
தமிழகத்தில் மா உற்பத்தியில் முதன்மை வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூர், சாமல்பட்டி, ஊத்தங்கரை, அந்தேரிப்பட்டி, கொடமாண்டப்பட்டி, குன்னத்தூர், ஓலப்பட்டி, தாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மா மரங்கள் அதிகளவில் உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மா தோட்டங்களில் மாம்பூக்கள் பூத்து குலுங்கியதால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் மா மரங்களுக்கு மருந்து தெளிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து, வறட்சியின் தாக்கத்தால் மா பிஞ்சுகள் உதிர்ந்து வருவதால், மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் வறண்டு வருகிறது. மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வருவதால் மா மரங்களும் காய்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மா மரங்கள் மழையின்றி காய்ந்து வருவதால், விவசாயிகள் ஒரு டிராக்டர் தண்ணீரை ரூ.500 முதல் ரூ.700 வரை விலை கொடுத்து வாங்கி ஊற்றி, மா மரங்களை காப்பாற்றி வருகிறார்கள். இதுகுறித்து கரடியூரை சேர்ந்த மா விவசாயி மன்னன் கூறுகையில், வருடா வருடம் மா விவசாயிகள் பெருத்த நஷ்டமடைந்து வருகிறோம்.
விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைவு அல்லது மழையால் விளைச்சல் சரிவு போன்ற காரணங்களால் பல மடங்கு நஷ்டமடைந்து வருகிறோம். கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு பூக்கள் நன்றாக பூத்துள்ளது.
கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு மருந்துகள் விலை உயர்ந்துள்ளது. கடும் வெயில் வாட்டுவதால், காய்ந்து வரும் மா மரங்களை காப்பாற்ற, தண்ணீரை விலை கொடுத்து வாங்கி ஊற்றி வருகிறோம், என்றார்.
