×

தமிழ்நாடு, கேரளா, புதுவை உட்பட 5 மாநில தேர்தல் தேதி மார்ச் 13க்கு பிறகு அறிவிப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெற உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போது இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அப்போது பிப்.26ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று, மே 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசுகள் பதவி ஏற்றன.

இதன் அடிப்படையில் மேற்கு வங்க சட்டப்பேரவை பதவிக்காலம் வருகின்ற மே 7ம் தேதியும், தமிழக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 10ம் தேதியும், அசாம் மே 20ம் தேதியும், கேரளா மே 23ம் தேதியும், புதுச்சேரி சட்டப்பேரவை பதவிக்காலம் ஜூன் 15ம் தேதியும் முடிவுக்கு வருகின்றன.அதற்கு முன்பு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். புதிய அரசுகள் பதவி ஏற்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையில் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் தேர்தல் கமிஷன் குழுவினர் ஆய்வு பணிகளை முடித்துவிட்டனர். இறுதியாக மேற்குவங்கத்தில் நேற்று ஆய்வு முடிந்தது. இதை தொடர்ந்து தேர்தல் கமிஷன் குழுவினர் நேற்று இரவு டெல்லி சென்றனர். எனவே விரைவில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளனர்.

இதற்கிடையே பிரதமர் மோடி இன்று பிரசாரத்திற்காக தமிழ்நாடு மற்றும் கேரளா வருகிறார். மேலும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 22வது தவணை தொகை ரூ.19000 கோடியை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கும் நிகழ்ச்சி 13ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்கிறது. எனவே அந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, அதாவது மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக மார்ச் 17ஆம் தேதிக்குள் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதி முறைகள் அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வந்து விடும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : Tamil Nadu ,Kerala ,Puducherry ,New Delhi ,Election Commission ,West Bengal ,Assam ,
× RELATED பாகிஸ்தானில் தீவிர சிக்கன நடவடிக்கை...