×

நடிகர் ஜூனியர் என்டிஆரை பார்க்க குவிந்த ரசிகர்களால் மருத்துவமனை சூறை: கூட்டத்தின் மீது போலீஸ் தடியடி

 

பெங்களூரு: பெங்களூருவில் புதிய மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வந்த நடிகர் ஜூனியர் என்டிஆரை காண ரசிகர்கள் குவிந்ததால் தடியடி நடந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா பகுதியில் கிம்ஸ் மருத்துவமனையின் புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கலந்து கொண்டார்.

அவர் மருத்துவமனைக்கு வருகை தந்த போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். மருத்துவமனையின் மேல் தளத்தில் இருந்த ஜூனியர் என்டிஆரை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எஸ்கலேட்டர் படிக்கட்டில் ஏற முயன்றனர். ரசிகர்களின் பாரம் தாங்காமல் எஸ்கலேட்டர் கண்ணாடி உடைந்து சிதறியது.மேலும் வரவேற்பு அறையில் இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளையும் ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்.

பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் மற்றும் தனியார் செக்யூரிட்டிகளின் தடுப்புகளை மீறி ரசிகர்கள் மருத்துவமனைக்குள் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நிலைமை கைமீறிப்போனதை அடுத்து பெங்களூரு போலீசார் அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த ரசிகர்களின் ரகளையால் மகாதேவபுரா மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிகளில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இவ்வளவு களேபரங்களுக்கு இடையிலும் அமைதி காத்த நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது காரில் இருந்தபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தபடி கிளம்பினார். இதுகுறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Tags : Jr. NTR ,Bengaluru ,KIMS Hospital ,Mahadevapura ,Bengaluru, Karnataka ,
× RELATED ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 115...