- உயர் நீதிமன்றம்
- ஆம்ஸ்ட்ராங்
- உச்ச நீதிமன்றம்
- சென்னை
- பகுஜன் சமாஜ் கட்சி
- நாகேந்திரன்
- அஸ்வத்தாமன்
- பொன்னை பாலு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5ம் தேதி அவரது வீட்டின் அருகில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 30 பேர் மீது காவல்துறை குற்றம்சாட்டியதோடு, 28 பேரை கைது செய்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட‘‘சம்பவம் செந்தில்” உள்ளிட்ட இருவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர். இதில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். மேலும் பிரதான குற்றவாளியான நாகேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 250 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 736 பக்க அறிக்கையையும், குற்றப்பத்திரிகையையும் காவல்துறை தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை நீடித்து வரும் நிலையில் குற்றம்சாட்டபட்ட அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு, முகிலன், விஜயகுமார், விக்னேஷ், ராஜேஷ், கோபி, செந்தில்குமார், அஞ்சலை, மலர்கொடி ஆகிய 14 பேர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அவர்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அஞ்சலை மற்றும் மலர்கொடி ஆகியோரை தவிர்த்து, அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, உடனடியாக சரணடையவும் ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அதேபோன்று இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் குற்றம்சாட்டப்பட்ட அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், விக்னேஷ், சிவா, முகிலன் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைரவன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
