×

தொழில்துறையில் ஆற்றிய பணிகளே எதிர்கால வெற்றிக்கு உறுதுணை: அமைச்சர் தா.மோ. அன்பரசன்

 

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிலை அதிமுக ஆட்சியில் எவ்வாறு இருந்தது? இந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் என்ன நிலையை எட்டி உள்ளது?

ஊரக தொழில் துறை என்ற பெயரை எம்எஸ்எம்இ என ஸ்டைலாக முதல்வர் பெயர் மாற்றம் செய்தார். அதிமுக ஆட்சியில் முடிவில் 6.5.2021 நிலவரப்படி, 3,10,610 நிறுவனங்கள் மட்டுமே பதிவு ெசய்திருந்தது. 33,47,447 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. திமுக பொறுப்பேற்றப் பிறகு 41,18,420 எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,97,33,722 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யதாக நிறுவனங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்திய அளவில் தமிழ்நாடு எம்எஸ்எம்இ துறையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2016-21 வரையில் இத்துறைக்கு ரூ.2,334 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-25ம் ஆண்டில் அதிகபட்ச ஆண்டு ஒதுக்கீடு ரூ.1911 கோடி, 5 ஆண்டுகாலத்தில் மொத்தம் ரூ.6,602 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்பு நிறுவனத்திற்கு அனுமதி பெற 30 இடங்களில் அனுமதி வாங்கவேண்டி இருந்த நிலையை ஒரே இடத்தில் வாங்கி தொழில் தொடங்கும் வகையில் 2.0 என்ற ஒற்றை சாளர இணையதளம் கொண்டுவரப்பட்டது. 1,03,121 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. 94,488 விண்ணப்பங்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடைசி இடத்தில் இருந்தது. திமுக பொறுப்பேற்ற பின் 3வது இடத்தை பிடித்து தற்போது முதலிடத்தில் உள்ளோம். 172 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.19.34 கோடி முதலீடு செய்துள்ளோம்.

எஸ்சி-எஸ்டி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதார நிதியை ரூ.60.80 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் ரூ.464 கோடியில் 809 ஏக்கரில் 18 சிட்கோ பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் 633 ஏக்கர் பரப்பளவில் 19 ெதாழில்பேட்டைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ரூ.81 கோடியில் தங்கநகை பூங்கா கோவையிலும், ரூ.25 கோடியில் சேலத்தில் வெள்ளி கொழுசு உற்பத்தி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் 55,230 தொழில் முனைவோர்களை உருவாக்கிய நிலையில் 5 வருடத்தில் 81,598 இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கியுள்ளோம். மிகபெரிய வளர்ச்சியை எம்எஸ்எம்இ மூலம் சிறு தொழில்களை பெரிய தொழில்களாக வளர்ச்சி பெற செய்துள்ளோம்.

* உங்கள் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எத்தகைய எதிரொலிப்பை ஏற்படுத்தும்?

தமிழ்நாட்டின் வளர்ச்சி 15 விழுக்காடுகள் முன்னிலையில் உள்ளோம். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு புலம் பெயர்வதை குறைத்திடும் வகையில், உள்ளூரில் உள்ள வளங்களை பயன்படுத்தி புதிய தொழில் தொடங்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் உலகத்தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்திட திருமுடிவாக்கம் துல்லிய உற்பத்தி பெருங்குழுமம், திண்டிவனத்தில் மருந்தியல் பெருகுழுமம் அமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் குறைந்த வாடகையில் தங்குவதற்கு தொழிலாளர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதை போல் 83,000 தொழில் முனைவோர் உருவாக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இது வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமையும்.

* திமுக கூட்டணியில் சில கட்சிகள் புதிதாக இணைந்துள்ள நிலையில், கூட்டணி கட்சியினரோடு எந்த மாதிரியான ஒத்துழைப்பை ஏற்படுத்தி தேர்தலை சந்திக்க உள்ளீர்கள்?

ஏற்கனவே கூட்டணி தொடர்ந்து 7,8க்கும் மேற்பட்ட தேர்தல்களை சந்தித்த கூட்டணிகள் தான் அப்படியே இருக்கிறது. இப்போது தேமுதிக வந்துள்ளது. ஏற்கனவே ஒற்றுமையாக தான் இருக்கிறோம். கடந்த வாரம் ஆலந்தூர் தொகுதியில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு நன்றாக பேசினார்கள், மீண்டும் திமுக ஆட்சியை கொண்டு வர கடுமையாக உழைப்போம் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு தான் சென்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி பலமாக உள்ளது. இது கொள்கை கூட்டணி எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய கூட்டணி ஆகும்.

* புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் பலர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக சொல்லப்படுகிறது. இதை எப்படி எதிர்கொள்ள இருக்கிறீர்கள்?

நாங்கள் காலையில் வீட்டில் இருந்து கிளம்பினால் ஒரு நாளைக்கு 5,000 பேரை பார்க்காமல் வீட்டிற்கு போவதில்லை. கீழே உள்ள களநிலவரம் எங்களுக்கு தான் தெரியும். ஓட்டு இல்லாத சிறுவர்கள், படத்தை பார்த்து விட்டு அப்படியும், இப்படியும் என்று இருக்கிறார்கள், அது சரியாகிவிடும். திமுக பலமாக உள்ளது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது, நாங்கள் தான் நிச்சயமாக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் வெள்ளை நிறத்தில் காக்கா வந்தது. அது அடிபட்டு கீழே விழுந்தது.

அதை கால்நடை மருத்துவர்கள் பிடித்து கூண்டில் வைத்திருந்தனர். அதைப் பார்ப்பதற்கு மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று பார்த்தனர். அதைப்போன்று தான் நடிகர்கள் வெளியில் வரும் போது சினிமாவில் பார்த்தோமே நேரடியாக எப்படி இருக்கிறார் என்று அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் பார்க்க போவார்கள், விஜயகாந்த்திற்கு கூடாத கூட்டமா? கூட்டம் கூடுவதினாலே அது ஓட்டாக மாறும் என்று கூறமுடியாது. நிச்சயமாக இந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக முதல்வர் ஆவார், திமுக 7வது முறையாக ஆட்சிக்கு வரும் இதை யாராலும் தடுக்க முடியாது.

Tags : Minister ,Tha.Mo. Anbarasan ,AIADMK ,
× RELATED இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்தல்: 6 கிலோ தங்கம் பறிமுதல்