×

நடிகர் விஜயை பின் தொடர்ந்ததால் விபத்து; சிகிச்சை பெறும் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

 

சென்னை: நடிகர் விஜயை பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கல்லூரி மாணவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவச் செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். தவெக தலைவர் நடிகர் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக விஜய் கடந்த 4ம் தேதி தஞ்சையில் நடைபெற்ற தனது கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்றார். அப்போது அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்களான விக்னேஷ், ஆரோன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி 2 பேரும் படுகாயம் அடைந்தனர். ஒருவருக்கு தலையில் பலத்த அடியும், மற்றொருவருக்கு இடுப்பு எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களிடமோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமோ விஜய் தொலைபேசியில் கூட அழைத்து நலம் விசாரிக்கவில்லை. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கே நேரில் செல்லாத விஜய், இங்கே வந்தா பார்க்க போகிறார் என்ற குமுறல் அவர்களின் குடும்பத்தினாரிடையே இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிவித்ததும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனைக்கே நேரில் சென்று 2 பேரிடம் நலம் விசாரித்தார். அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டறிந்தார். நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் மருத்துவச் செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு தைரியம் அளித்தார். அமைச்சர் அன்பில் மகேஷின் பேச்சு பெற்றோருக்கு ஆறுதலை அளித்துள்ளது. அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அன்பில் மகேஸின் இந்த நலம் விசாரிப்பு சந்திப்பு, தஞ்சாவூர் பகுதி தவெகவினர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. அமைச்சரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. கரூரில் தவெக கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதே போல் விஜயின் முதல் மாநாடான விக்கிரவாண்டிக்கு சென்னையிலிருந்து வந்த இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.

அதே போல் விஜய் வர தாமதமானதால் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த சார்லஸ் என்பவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியானார். மேலும் மதுரையில் நடந்த மாநாட்டின் போது நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ரோஷன் உயிரிழந்தார். அது போல் அரியலூரை சேர்ந்த ஜெயசூர்யா சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதி கழக நிர்வாகி பிரபாகரன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி காளிராஜ் ஆகியோரும் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு பின்பு உயிரிழந்தனர். அது போல் சேலத்தில் நடந்த மாநாட்டில் வெயிலின் கொடுமையான வடமாநிலத் தொழிலாளி சூரஜ்குமார் உயிரிழந்தார். அது போல் கரூரில் நடந்த தவெக பொதுக் கூட்டத்திற்கு விஜய்யின் கேரவனை துரத்திக் கொண்டு வந்த இளைஞர்கள் அந்த வாகனத்தின் முன் டயர் அருகே விழுந்தனர். அவர்களின் நிலை என்னவானது என இதுவரை தெரியவில்லை. இப்படி இருக்கையில் ஒரு மரணத்திற்கும், விபரீதத்திற்கும் பொறுப்பேற்காமல் இரங்கலோ அல்லது ஆறுதலோ சொல்லாமல் விஜய் அவர் போக்கில் இருந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Vijay ,Minister ,Anbil Mahesh ,Chennai ,
× RELATED மேம்பாலங்கள் அமைப்பதற்கான...