உரிய அனுமதி இல்லாமல் மசாஜ் சென்டர் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: உரிய அனுமதி இல்லாமல் சென்னையில் மசாஜ் சென்டர்களை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் எவ்வித உரிமமும் இல்லாமல் இயங்கும் மசாஜ் சென்டர்களை முறைப்படுத்தி, அனுமதி பெறுவதற்கான விதிகளை சென்னை மாநகராட்சி அறிவித்தது. அதன்படி மசாஜ் சென்டர்கள் அனைத்தும் தொழில் உரிமம் பெற வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு விதிகளையும் அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி பிசியோதெரபி, ஆக்குபேசனல் தெரபி, அக்குபஞ்சர் தெரபி உள்ளிட்ட படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து முடித்து முறையான பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அழகு நிலையம், ஸ்பா  மற்றும் மசாஜ் பார்லர் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தான் நிலையங்களை நடத்த முடியும். வேலை நேரத்தில் கடையின் முதன்மை கதவு திறந்துதான் இருக்க வேண்டும். கதவுகளை மூடிவிட்டு எந்த விதமான பணிகளையும் செய்யக் கூடாது. அனைத்து அறைகளிலும் போதுமான விளக்குகளை அமைக்க வேண்டும். நிலையத்தின் உள்ளே செல்லும் கதவு மற்றும் வெளியே வரும் கதவு ஆகிய இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். நிலையத்திற்கு வந்து செல்பவர்கள் தொடர்பான பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.  

உள்ளிட்ட பல விதிகளை வகுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அழகு நிலையம், ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர் ஆகிய தொழில்களுக்கு உரிமம் பெற விரும்புபவர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வரை 188 பேர் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர். அதன்படி பியூட்டி பார்லர்களுக்கு 58, மசாஜ் பார்லர்களுக்கு 15, ஸ்பாக்களுக்கு 115 விண்ணப்பங்களும் சென்னை மாநகராட்சி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 25 ஸ்பா, 1 மசாஜ் பார்லர், 8 பியூட்டி பார்லர் என்று சென்னை மாநகராட்சியால் மொத்தம் 34 அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்படும் மசாஜ் பார்லர் உள்ளிட்டவைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: