டெல்டா பகுதி, மதுரை, கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் ரூ.125 கோடியில் 5,955 கி.மீ. நீளத்திற்கு ஆறுகள், கால்வாய்கள் தூர்வாரும் பணி: அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

 

சென்னை: மதுரை, கோவை, டெல்டா பகுதி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் ரூ.125 கோடியில் 5,955 கி.மீ. நீளத்திற்கு ஆறுகள், கால்வாய்களை தூர்வாரும் பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, 13 டெல்டா மாவட்டங்கள், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களில் 11 மாவட்டங்கள் என மொத்தம் 24 மாவட்டங்களில் 5,954.94 கி.மீ நீளத்திற்கு ரூ.125 கோடி மதிப்பீட்டில் சுமார் 13 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் மற்றும் வடிகால்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அம்மூண்டி கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே 600.80 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ரூ.46 கோடியே 44 லட்சம் செலவில் தடுப்பணை மற்றும் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வெப்பாலை கிராமம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே 600 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ரூ.23 கோடியே 8 லட்சம் செலவில் தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, தற்போது நடைபெற்றுவரும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஜூன் மாதம் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும்போது கடைமடைவரை தண்ணீர் சென்று சேருவதில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், இந்த ஆண்டு சிறப்பு தூர்வாரும் பணிகள் முன் எப்போதும் இல்லாத வகையில் முன்கூட்டியே துவங்கப்பட்டுள்ளது.

எனவே, இதனை பயன்படுத்த தூர்வாரும் பணிகள் செவ்வனே நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பொறியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறையின் செயலாளர் ஜெயகாந்தன், தலைமை பொறியாளர் (பொது) கோபாலகிருஷ்ணன், மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: