இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில், அரசு தற்போது எரிபொருள் விலையை லிட்டருக்கு 55 ரூபாய் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 321.17 ரூபாயாகவும், டீசல் விலை 335.86 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதே இந்த விலை மாற்றத்திற்குக் காரணம் என்று அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. குறிப்பாக, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் எரிபொருள் விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து துணைப் பிரதமர் இஷாக் தார் இது குறித்துக் கூறுகையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்களால் அரசுக்கு வேறு வழியில்லை என்றும், உலகளாவிய விலை உயர்வின் தாக்கத்தை நுகர்வோர் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ‘ஹார்முஸ் ஜலசந்தி’ வழியாகவே இறக்குமதி செய்கிறது.
இந்தப் போர்ச் சூழலால் இந்த முக்கிய கடல்வழிப் போக்குவரத்துப் பாதை பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், பொருளாதாரத்தைச் சமாளிக்கவும் வாரம் ஒருமுறை எரிபொருள் விலையை ஆய்வு செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, லாகூர் மற்றும் கராச்சி போன்ற பெரிய நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பினர். அதே நேரத்தில், எரிபொருளைப் பதுக்கி வைத்துச் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.
இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும் என்பதால், ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் பாகிஸ்தான் மக்களுக்கு இது பெரும் சுமையாக அமையும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
