×

சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வரலாறு காணாத வகையில் 15,372 பேர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணலை நடத்துகிறார்

 

 

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வரலாறு காணாத வகையில் 15,372 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணலை நடத்த உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான அறிவிப்பு வரும் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் திமுக மெகா கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த மாதம் 20ம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெறப்பட்டு வந்தது. ரூ.1,000 விண்ணப்ப படிவ கட்டணத்துடன் பொதுத்தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் என்று விருப்ப மனு கட்டணமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்து வந்தனர். விருப்ப மனு அளிக்க மார்ச் 2ம் தேதி கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. திமுகவினரிடம் காணப்பட்ட உற்சாகத்தால் விருப்ப மனுவுக்காக கால அவகாசம் நேற்று(மார்ச் 6ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டது. தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனர். அதேபோன்று திமுக நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கினர்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து நிறைய பேர் விருப்ப மனு அளித்தனர். 14 நாட்களாக நடைபெற்று வந்த விருப்ப மனு வினியோகம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது. கடைசிநாளான நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் தொண்டர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. கடைசி நாளான நேற்றும் அமைச்சர்கள், திமுக அணிகளின் நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர். வரலாறு காணாத வகையில் மொத்தம் 15,372 விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட உற்சாகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு முடிவடைந்துள்ள நிலையில் வேட்பாளர் நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக முனைப்பு காட்டி வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தவுடன் திமுக போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்படும். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களை மாவட்ட வாரியாக அழைத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வேட்பாளரை முடிவு செய்வார்.

Tags : Dimuka ,Chief Minister ,Mu K. Stalin ,Chennai ,K. Stalin ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி...