×

தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

மதுரை: திருமங்கலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; சில காலத்துக்கு முன்பு வரை இந்த மேடையில் இருப்போம் என ஓ.பன்னீர்செல்வமே எதிர்பார்த்திருக்க மாட்டார். லேட்டாக இருந்தாலும் எம்.ஜி.ஆர். இருந்த தாய்க் கழகமான திமுகவுக்கு ஓபிஎஸ் திரும்பியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு நீங்கள் மட்டும் ரசிகன் அல்ல, நானும் ரசிகன்தான். திமுக எம்.ஜி.ஆரை வளர்த்தார், எம்.ஜி.ஆரும் திமுகவை வளர்த்தார்; கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர். உரிமைக் குரல் எழுப்பி தாய் கழகத்துக்கு திரும்பி உள்ளீர்கள்.

அண்ணா தொடங்கிய இயக்கத்துக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக தற்போது யாருக்கோ அடிமை சேவகம் செய்கிறது. அண்ணா பெயரை தாங்கியுள்ள இயக்கம் அவரையும் மறந்துவிட்டது; அவரது கொள்கையையும் மறந்துவிட்டது. சுயமரியாதையின் கோட்டையாக அண்ணா அறிவாலயம் திகழ்கிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பச்சைத் தமிழர் என்று முரசொலி நாளிதழ் பட்டம் கொடுத்து செய்தி வெளியிட்டது. கலைஞரால் பாராட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் எப்போதுமே சிரித்த முகமாகவே இருப்பார்; அதுதான் அவருடைய பண்பு. ஓ.பன்னீர்செல்வத்தின் சிரிப்பே சட்டமன்றத்தில் அவருக்கு பிரச்சனையாகிவிட்டது. என்னைப் பார்த்து ஓபிஎஸ் சிரித்ததை ஏதோ போர் வந்தது போன்ற பிரச்சனை போல் ஆக்கிவிட்டார்கள். அமைதியும் புன்னகையும் மட்டுமல்ல; ஓபிஎஸ் என்று சொன்னால் விசுவாசம்தான். ஜெயலலிதா அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வத்தை இரண்டு முறை அமர வைத்தார். தன்னை காப்பாற்றிக் கொள்ள எதை வேண்டுமானாலும் பழனிசாமி செய்வார்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தையே அடமானம் வைத்துள்ளார் எடப்பாடி; பாஜக தனக்கு நல்லது செய்யும் என பழனிசாமி எதிர்பார்க்கிறார்; ஆனால் பாஜக யாருக்கும் நல்லது செய்யாது. மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது ஒன்றிய பாஜக அரசு; பாஜக ஒருபோதும் மக்களுக்கு நல்லது செய்யவிடாது. வார்த்தைக்கு வார்த்தை பெண்கள் சக்தி என பேசிய பிரதமர் மோடி, நிதிச் சுமை உருவாக்குவதுதான் பெண் சக்தியா? தேர்தலை காரணம்காட்டி மகளிர் உரிமைத் தொகையை முடக்க பாஜக முயற்சி செய்தது. பாஜகவை பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய விட மாட்டார்கள்.

யாருக்குமே நன்மை செய்யாத பாஜகவா, அதிமுகவுக்கு நன்மை செய்யப் போகிறது? பழனிசாமி தற்போதாவது தலையை நிமிர்ந்து பீகாரில் நடப்பதை பார்க்க வேண்டும். அதிமுகவின் ரத்தத்தை பாஜக உறிஞ்சுகிறது. வரும் தேர்தல்வரைக்கும்தான் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பார். தேர்தல் முடிந்தவுடன் அதிமுக பொதுச்செயலாளர் மாற்றப்படுவார்; எடப்பாடியை பயன்படுத்தி அதிமுக வாக்குகளை பெற்று தன்னை வளர்த்துக் கொள்ள பாஜக திட்டம்; மராட்டியத்தில் சிவசேனாவுக்கு, பீகாரில் நிதிஷுக்கு நடந்ததுதான் தமிழ்நாட்டில் எடப்பாடிக்கு நடக்கும்.

நிதிஷ் குமார் பதவி விலகுகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது; நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட கதிதான் பழனிசாமிக்கும் ஏற்படும். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை அதிமுக பொதுச்செயலாளராக பாஜக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. அதிமுக கூட்டணி என்று பாஜக தலைவர்கள் கூறுவது இல்லை; என்.டி.ஏ. கூட்டணி என்றுதான் கூறுகின்றனர். அந்த அளவுக்கு பாஜகவின் கட்டுப்பாட்டுக்கு அதிமுக சென்றுவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் பாஜக ஆதரவு செயல்பாட்டால் அதிமுகவினரே அதிருப்தியில் உள்ளனர். எய்ம்ஸ் கட்ட தாமதம் மட்டுமல்ல, மதுரையில் மெட்ரோ வராமல் தடுக்கிற ஆட்சியாக பாஜக அரசு உள்ளது.

மதுரை வந்த பிரதமர் மோடியால் எந்த திட்டத்தையாவது சொல்ல முடிந்ததா? இது கொள்கை கூட்டணி மட்டுமல்ல, மக்கள் மீண்டும் மீண்டும் தேர்தெடுக்கக் கூடிய வெற்றிக் கூட்டணி; தமிழ்நாட்டில் மதக் கலவரமும் மக்களிடையே மோதலும் நடக்காமல் பார்த்துக் கொண்டது திராவிட மாடல் ஆட்சி; தமிழ்நாட்டின் வளர்ச்சி பெற வேண்டும் நினைக்கின்றவர்கள் மதச்சார்பற்ற கூட்டணிக்கு வருகிறார்கள். திமுக கூட்டணிதான் வெற்றி பெறப் போகிறது என்று பாஜகவே நினைக்கிறது. திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது தெரிந்துதான் ஆளுநர் ஆர்.என்.ரவியையே மாற்றி விட்டார்கள்.

தேர்தல் முடியும் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என கோரிக்கை வைத்தோம்ஆளுநரை மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை கூட நிறைவேற்ற மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : EDAPPADI PALANISAMI ,MRS. ,K. Stalin ,Madurai ,Chief Minister ,MLA ,OPS ,Thirumangala ,Dimugal ,Paneer Selva ,M. G. R. ,Thimuga ,
× RELATED சபாநாயகர் ஓம் பிர்லாவை நீக்க...