×

நாளை மறுநாள் திருச்சியில் திமுக மாநாடு; முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுகின்றனர்

 

திருச்சி: திருச்சி சிறுகனூரில் நாளைமறுதினம் (9ம் தேதி) திமுகவின் பிரமாண்ட 12வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு என்றாலே திமுக தான் என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த காலங்களில் திமுக மாநாடுகள் நடந்துள்ளன. திமுக மாநில மாநாடுகளின் வரலாறும், அவற்றின் அரசியல் தாக்கமும் எப்போதும் கவனத்தை பெற்று வந்துள்ளன. இந்த மாநில மாநாடுகள், கட்சியின் அரசியல் திசையை நிர்ணயிக்கும் முக்கிய மேடையாகவும், தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பெரிய சக்தியாகவும் இருந்து வந்துள்ளன என்றால் மிகையாகாது. திமுக துவங்கப்பட்ட 1949ம் ஆண்டுக்கு பின்னர் நடத்தப்பட்டு வரும் இந்த மாநாடுகள், திமுகவின் வளர்ச்சியை வலுப்படுத்தியதுடன், அமைப்பு ரீதியான மிகப்பெரிய இடத்தை அடைவதற்கு உதவியுள்ளது. 1951ம் ஆண்டு சென்னையில் பேரறிஞர் அண்ணா தலைமயைில் முதல் மாநில மாநாடு நடந்தது.

அதில், கட்சியின் கொள்கைகள், அமைப்பு விரிவாக்கம் மற்றும் சமூகநீதி அடிப்படையிலான அரசியல் நோக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.  இதையடுத்து 1956ம் ஆண்டு திருச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாடு திமுகவுக்கு மிகப்பெரும் திருப்புமுனையை அளித்தது. அதில்தான், 1957ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து தொண்டர்களிடம் நேரடி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 56,942 தொண்டர்கள் ஆதரவாகவும், 4,203 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதன் மூலம் திமுக தேர்தலில் நேரடியாக களம் காணும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுதான் பின்னர் தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுத்தது.

அடுத்து 1961ம் ஆண்டு மதுரையில் அண்ணா தலைமையில் மூன்றாவது மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் சமூக நீதி, மொழி உரிமை மற்றும் மாநில உரிமைகள் குறித்த தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன. 1966ம் ஆண்டு சென்னை நகரில் நடந்த நான்காவது மாநில மாநாடு, 1967 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் திட்டங்களை வகுக்கும் முக்கிய களமாக காணப்பட்டது. அந்த மாநாட்டை தொடர்ந்து நடந்த தேர்தலில் தான் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, முதன் முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 1975ம் ஆண்டு கோவையில் நடந்தது 5வது மாநில மாநாடு. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி தலைமையில் இந்த மாநாடு நடந்தது.

அதில், சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் வலிமையை வெளிப்படுத்துவதற்கான நிகழ்வாக அனைவராலும் பார்க்கப்பட்டது. 1990ம் ஆண்டு பிப்ரவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் திருச்சியில் நடந்த ஆறாவது மாநில மாநாடு, அன்றைய அரசியல் சூழ்நிலையிலும், எதிர்க்கட்சி காலத்திலும் கட்சியின் அமைப்பை வலுப்படுத்த முக்கியமானதாக இருந்தது. தொடர்ந்து 1993ம் ஆண்டு கோவையில் நடந்த 7வது மாநில மாநாடு, திமுகவின் கொங்கு மண்டல அளவிலான வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. 1996ம் ஆண்டு திருச்சியில் கலைஞர் தலைமையில் நடந்த 8வது மாநில மாநாடு தேசிய மற்றும் மாநில அரசியல் பரிமாற்றங்களின் சூழலில் நடந்தது எனலாம். 1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்திய அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள், கூட்டணி அரசியல் வளர்ச்சி போன்ற அம்சங்கள் அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

அதன் பின்னர் 2006ம் ஆண்டு மீண்டும் திருச்சியில் கலைஞர் தலைமையில் 9வது மாநில மாநாடு 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுக்கான மாநாடு என கூறலாம். அந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 173 இடங்களில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்தது. 2014ம் ஆண்டு திருச்சியில் கலைஞர் தலைமையில் நடந்த 10வது மாநில மாநாடு சமூகநலத்திட்டங்கள், ஏழை, எளிய மக்களுக்கான நலவாழ்வு திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை ஆகியவற்றை மையப்படுத்தியது. அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் பின்னர் அரசியல் பிரச்சாரத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாயின.

அதன் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை அமைத்தது. திருச்சியில் நடத்தப்படும் மாநாடுகளுக்கு பின்னர் கட்சி பல்வேறு வகையிலும் உயர்வை எட்டியது. கட்சி தொண்டர்களை ஒருங்கிைணப்பது உட்பட பல்வேறு வகையிலும் திருச்சி வசதியாக இருந்ததை தொடர்ந்து திருச்சியில் மாநாடு என்பது திமுக-வின் இயல்பானது. மீண்டும் 2021ம் ஆண்டு திருச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த 11வது மாநில மாநாடு மத்திய அரசியல் சூழ்நிலையை விமர்சித்தும், கட்சி அமைப்பை மறுசீரமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் தொண்டர் படையை விரிவுபடுத்துவது, இயக்கத்தை வலுப்படுத்துவது என்பன உள்ளிட்ட முயற்சிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் தான் தற்போது, 2026ம் ஆண்டு வரும் 9ம் தேதி திருச்சி சிறுகனூரில் 12வது மாநில மாநாடு நடத்த திமுக முடிவு செய்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 10 லட்சம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு இதுகுறித்து கூறுகையில், கடந்த தேர்தலின் போது இதே இடத்தில் மகளிர் உரிமைத்தொகை போன்ற 7 வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதே போன்று இந்த மாநாட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம் என்றார். இதுவரை திருச்சியில் நடந்தேறிய மாநாடுகள் திமுக-விற்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியதாகவும், திமுக வரலாற்றின் ஒரு பெரும் நிகழ்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நாளை மறுதினம் நடைபெறும் மாநாடும் திராவிட மாடல் அரசின் 2.0 ஆட்சிக்கு கட்டியம் கூறுவதாக அமையும் என்றே அரசியல் நோக்கர்கள் அடித்து கூறுகின்றனர்.

12ல் 7 திருச்சியில்….
திமுக இதுவரை நடத்தியுள்ள 11 மாநாடுகளில் 6 திருச்சியில் தான் நடந்துள்ளது. இப்போது 12வது மாநாடும் திருச்சியில் நடக்கிறது. திருச்சியை தீரர்கள் கோட்டம் என்று அண்ணா அழைத்தார். முன்னால் முதல்வர் கலைஞர் திருச்சியில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து போராட்டம் நடத்தினார். திமுகவின் பல போராட்டங்களுக்கு திருச்சி அடித்தளமாய் இருந்துள்ளது. திமுகவின் மாநாடுகளுக்கு இது ஒரு காரணமாக இருந்தாலும், தமிழகத்தின் மைய பகுதியாக திருச்சி உள்ளது. தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் 5 மணி நேர பயணத்தில் திருச்சிக்கு வந்து விடலாம். இதுவும் திருச்சியில் தொடர் மாநாடு நடத்த காரணமாகும்.

Tags : DIMUKA ,K. STALIN ,Tiruchi ,12th state conference ,Timuka ,Trichy Siruganur ,Dimuka State Conferences ,
× RELATED சட்டசபை தேர்தலில் திமுக சார்பில்...