×

சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தி மகளிர் தினத்துக்கு மோடி அரசு தந்த பரிசு சமையல் காஸ் ரூ.928 ஆக உயர்வு: வர்த்தக சிலிண்டர் விலையும் ரூ.115 அதிகரிப்பு: அதிகாலையில் இடியை இறக்கிய ஒன்றிய அரசு

சேலம்: ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ.60ம், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.115ம் அதிகரித்துள்ளது. இதனால் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.928 ஆக அதிகரித்துள்ளது. மகளிர் தினத்திற்கு பிரதமர் மோடி தந்த பரிசாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. இதன்படி, 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை, கடந்தாண்டு ஏப்ரல் 8ம் தேதி ரூ.50 அதிகரிக்கப்பட்டு, டெல்லியில் ரூ.853, மும்பையில் ரூ.852.50, கொல்கத்தாவில் ரூ.879, சென்னையில் ரூ.868.50, சேலத்தில் ரூ.886.50 என நிர்ணயிக்கப்பட்டது.

இவ்விலையில் மே மாதம் முதல் கடந்த மாதம் (பிப்ரவரி) வரை எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த 1ம் தேதி வெளியான நடப்பு மாதத்திற்கான (மார்ச்) விலை பட்டியலில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை, ரூ.28 முதல் ரூ.31 வரை அதிகரிக்கப்பட்டது. சென்னையில் கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,899.50 என இருந்த நிலையில், ரூ.29.50 அதிகரித்து ரூ.1,929 ஆகவும், சேலத்தில் ரூ.1,848ல் இருந்து ரூ.30 அதிகரித்து ரூ.1,878 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் (பிப்.28 முதல்) ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் தொடுத்தன. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலை தொடர்ந்து, கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து அதிகம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியா, குறுகிய காலத்துக்கு (ஒரு மாதம்) ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இதனிடையே இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி., கையிருப்பு உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இச்சூழலில் நாடு முழுவதும் நேற்று அதிகாலை காஸ் சிலிண்டர் விலையை திடீரென உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ காஸ் சிலிண்டரின் விலை ரூ.115ம், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டரின் விலை ரூ.60ம் உயர்த்தப்பட்டது.

இதன்படி, சென்னையில் ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.114.50 உயர்ந்து, ரூ.2,043.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.868.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு சமையல் காஸ் சிலிண்டர், ரூ.60 உயர்ந்து ரூ.928.50 ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் வீட்டு சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டு, ரூ.946.50க்கும், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்ந்து ரூ.1,992.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவே வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.913, மும்பையில் ரூ.912.50, கொல்கத்தாவில் ரூ.939 ஆகவும், வர்த்தக சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1,883, மும்பையில் ரூ.1,835, கொல்கத்தாவில் ரூ.1.990 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விலை ஏற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி (இன்று) நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பிரதமர் மோடி தருவார் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு, கடும் அதிர்ச்சியே கிடைத்துள்ளது. மகளிர் தினத்திற்கு பிரதமர் மோடி தந்த பரிசாக சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு அமைந்துள்ளது.

இதனால், இல்லத்தரசிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரு பீப்பாய் 93 டாலராக அதிகரித்தது. நேற்று முன்தினம் 85 டாலர் என இருந்த நிலையில், ஒரே நாளில் 8 டாலர் உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக இவ்விலையேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இவ்விலை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் உடனடியாக காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தின விழா இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினத்தை பெண்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழும் நாளில், இல்லத்தரசிகளுக்கு பெரும் இடியாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.60ஐ உயர்த்தி ஒன்றிய பாஜ அரசு அறிவித்துள்ளது. இதுவே, கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்தபோது, நாடு முழுவதும் உள்ள மகளிருக்கு பரிசாக சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்கிறேன் என பிரதமர் மோடி அறிவித்தார்.

ஆனால் இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கு சிலிண்டர் விலையில் ரூ.60 உயர்த்தி, அதனையே பரிசாக ஒன்றிய பாஜ அரசு வழங்கியுள்ளது. இது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* சிலிண்டர் தட்டுப்பாடுதான் முதலில் ஏற்படும்
இந்தியாவிற்கு எல்.பி.ஜி. காஸ் சிலிண்டர் உற்பத்தி மேற்கொள்ள வளைகுடா நாடுகளான கத்தார், குவைத், ஈராக் ஆகிய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்திய ஆயில் நிறுவனங்கள் இறக்குமதி செய்கிறது. தற்போது, ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்திவரும் சூழலில், ஈரான் அருகில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப் பாதையை ஈரான் மூடி இருக்கிறது. இதன்காரணமாக இந்தியாவுக்கு வரவேண்டிய கச்சா எண்ணெய் பீப்பாய் லோடு ஏற்றிய 100க்கும் மேற்பட்ட கப்பல்கள், ஓமன் வளைகுடா கடல் பகுதியில் தேங்கி நிற்கிறது.

இதனால் இந்தியாவில் உள்ள எல்.பி.ஜி., காஸ் தயாரிக்கும் சுத்திகரிப்பு ஆலைகளில், பணிகள் முடங்கி இருக்கிறது. தற்சமயம், இருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை கொண்டு எல்.பி.ஜி., தயாரித்து, சிலிண்டர்களை நிரப்புகின்றனர். இவை 25 நாட்களுக்கு தான் தாக்கு பிடிக்கும். அதனால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், முதலில் காஸ் சிலிண்டர் விநியோகமே பாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டாம் கட்டமாக தான், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

* சிலிண்டர் மீண்டும் ரூ.1000ஐ தாண்டியது
கடந்த 2024ம் ஆண்டு துவக்கத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.950க்கு மேல் இருந்தது. அந்த நிலை தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள், இல்லத்தரசிகளிடம் இருந்து ரூ.40 முதல் ரூ.50 வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். இதனால் சிலிண்டர் வாங்க ரூ.1,000 கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் சிலிண்டர் விநியோகிக்க ரூ.100 வரை வாங்குகின்றனர். சமையல் சிலிண்டருக்கு ரூ.1000 கொடுக்க வேண்டிய சூழலால் இல்லத்தரசிகள் மத்தியில் ஒன்றிய பாஜ அரசு மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

* முக்கிய நகரங்களில் சிலிண்டர் விலை
நகரம் வீட்டு சிலிண்டர் வர்த்தக சிலிண்டர்
டெல்லி ரூ.913.00 ரூ.1,883.00
மும்பை ரூ.912.50 ரூ.1,835.00
கொல்கத்தா ரூ.939.00 ரூ.1,990.00
சென்னை ரூ.928.50 ரூ.2,043.50
சேலம் ரூ.946.50 ரூ.1,992.50

* சிலிண்டர் புக்கிங் இடைவெளி 25 நாட்களாக திடீர் அதிகரிப்பு
நாடு முழுவதும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டர்களை ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசி), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பி) ஆகியவை விநியோகித்து வருகின்றன. இவற்றில் 60 சதவீதம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் சப்ளையாகிறது.

சிலிண்டர் புக்கிங்கை பொருத்தளவில், ஒரு சிலிண்டர் வாங்கியபின் அடுத்த 21 நாள் கழித்து மீண்டும் புக்கிங் செய்து சிலிண்டர் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை இண்டேன் நிறுவனம் பின்பற்றி வந்தது. இந்நிலையில் தற்போது, சிலிண்டர் புக்கிங் இடைவெளியை 25 நாட்களாக அதிகரித்து இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

இதனால், நேற்றைய தினம் ஆன்லைன் சிலிண்டர் புக்கிங்கிற்கு பயன்படுத்தும் கணினிமயமாக்கப்பட்ட எண்ணில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டபோது, பலருக்கும் சிலிண்டர் புக்கிங் ஆகவில்லை. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால், தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதன்காரணமாகவே சிலிண்டர் புக்கிங் இடைவெளியை இண்டேன் நிறுவனம், 25 நாட்களாக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : PM Modi ,Women's Day ,EU government ,Salem ,United States ,Israel ,Iran ,
× RELATED தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி...