சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என கடந்த மாதம் தவெக தலைமை அறிவித்தது. பிப்ரவரி 6 தொடங்கி 14ம் தேதிவரை விருப்ப மனுவை அளிக்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது. விருப்ப மனு வாங்க ரூ.100ம், பூர்த்தி செய்து திரும்பக் கொடுக்கும்போது பொது பிரிவினர் ரூ.10,000மும் பட்டியலினப் பிரிவினர் ரூ.5,000மும் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. விருப்பமனு வாங்க 6ம் தேதி பனையூரில் உள்ள தவெக அலுவலக வாசலில் ஏராளமான தவெக தொண்டர்கள் திரண்டனர்.
விருப்பமனு விநியோகம் தொடங்கிய சில மணி நேரத்தில் 10,000க்கும் மேற்பட்ட விருப்பமனு வழங்கப்பட்டதாக அறிவித்தனர் தவெக நிர்வாகிகள். ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்கள் விருப்பமனு என்றால் என்னவென்றே தெரியாமல், ஏதோ திரைப்படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்குவதுபோல் வாங்குகிறார்கள் என சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அப்போது, பனையூர் தொகுதியில் விஜய் நிற்க வேண்டும் என விருப்ப மனு அளித்து தமிழக அரசியல் உலகையே தவெக தொண்டர்கள் ஆட்டம்காணச் செய்த நிகழ்வுகளும் அரங்கேறியது.
முதல்நாளில் தொண்டர்களின் ஆர்வத்தைப் பார்த்த தவெக தலைமை, இவர்கள் இதற்குமேல் அலுவலகத்திற்கு வந்தால் அலுவலகம் உள்ள பனையூர் பகுதியில் ஒரு ஓட்டுகூட தங்களுக்கு வராது என பயந்து, தொண்டர்கள் விருப்பமனுவை இணையத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ திருப்பி தருமாறு அறிவித்தது. பிப்.14ம் தேதியுடன் கடைசி தேதி முடிவடைந்த நிலையில், காலஅவகாசம் 20ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
அக்கட்சித் தொண்டர்கள் வாங்கியதில் பாதியில் பாதியளவு விருப்பமனு கூட திரும்பவரவில்லை என்பதால் தான் கால அவகாசம் நிட்டிக்கப்பட்டது. கால அவகாசம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், இன்னும் சில நாளில் எவ்வளவு விருப்பமனு கொடுக்கப்பட்டது, எவ்வளவு திரும்ப வந்துள்ளது என அறிவிப்போம் எனச் சொன்னார். அவர் சொல்லி இரண்டு வாரங்கள் கடந்துவிட்டது; தற்போதுவரை சொல்லவில்லை.
இந்நிலையில், தவெக சார்பில் விருப்பமனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் விருப்பமனு கொடுத்த தொண்டர்களை நேரில் வரவைத்து நேர்காணல் நடத்தாமல், ஆன்லைன் மூலமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாம். வழக்கமாக எல்லாக் கட்சிகளும் விருப்பமனு அளித்தவர்களை நேரில் அழைத்துதான் நேர்காணல் நடத்தும். ஆனால், தவெகவின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள காரணத்தை விசாரிக்கும்போது, நேரில் அழைத்து நேர்காணல் நடத்தினால் திரும்ப வந்த விருப்ப மனுக்களின் உண்மையான எண்ணிக்கை தெரிந்துவிடும்.
ஒருவேளை உண்மையான எண்ணிக்கை தெரிந்துவிட்டால், ஒரேநாளில் 10,000 விருப்பமனு விநியோகம் என தாங்கள் கட்டமைத்து வைத்துள்ள பிம்பம் உடைந்துவிடும் என்ற பயத்தால்தான் இவ்வாறு செய்வதாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், விருப்பமனு வாங்கியவர்கள் பெரும்பாலும் சினிமா டிக்கெட் வாங்கும் மனநிலையில் வாங்கியுள்ளனர்; அவர்கள் யாரும் திருப்பித்தர மாட்டார்கள் என விமர்சிக்கப்பட்டது உண்மை என தெரிந்துவிடும் என்பதும் இந்த நடவடிக்கைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
மேலும், தவெக தலைமை சார்பில் ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டது. விருப்பமனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடத்தாமல் வேட்பாளர்களை அறிவித்தால், விமர்சனம் எழும் என்பதால் பெயரளவில் மட்டுமே இந்த நேர்காணல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதுவும், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு மட்டும் நேர்காணல் நடத்தப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
