மக்கள் பணிகள் அனைத்தும் செய்யப்பட்டு கொளத்தூரை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவோம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி

 

பெரம்பூர்: சென்னையில் சி.எம்.டி.ஏ மற்றும் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுவரும் புதிய கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அவர், கொளத்தூரில் கட்டப்பட்டுவரும் சென்னை தொடக்கப்பள்ளி கட்டிடம், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் கொளத்தூர் நவீன அங்காடி, ஜவகர் நகரில் கட்டப்பட்டுவரும் மகளிர் உடற்பயிற்சி கூட கட்டடம், கொளத்தூர் கௌதமபுரத்தில் கட்டப்பட்டு வரும் நியாய விலை கடைகள் கட்டிடத்தில் ஆய்வு செய்தார். அப்போது சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் கவுசிக் உள்பட பலர் இருந்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; கொளத்தூர் தொகுதியில் இதுவரை இல்லாத வகையில் மக்களுக்கு தேவையான பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தேர்தல் நடைமுறைக்கு முன்பு எந்த பணிகளை எல்லாம் நிறைவு செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம்.

கொளத்தூர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. தன்னிறைவு பெற்ற தொகுதியாக விரைவில் கொளத்தூர் தொகுதி மாறும்.அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தாமதமாகிறதே? 2026ம் ஆண்டு தேர்தலில் திராவிட மாடல் 8 கால் பாய்ச்சலில் சென்றுகொண்டிருக்கின்றது. அந்த பாய்ச்சலில் வேகத்தின் காற்றைக்கூட பின்னால் வருகின்ற எதிர்கட்சிகளால் பிடிக்க முடியாது என்பது இந்த தேர்தலின் வெற்றி உறுதிப்படுத்தும். திமுக அரசு தன் தவறுகளை மறைக்க அவ்வப்போது இந்தி திணிப்பு என்று கையில் எடுக்கிறது என்று தமிழிசை கூறியுள்ளாரே? தமிழிசை சவுந்தரராஜன் அதிக நாட்கள் ஊரில் இல்லாமல் சென்றுவிடுகிறார் என்று நினைக்கிறேன். யாரும் தானாக எதுவும் செய்யவில்லை. ரயில் நிலையத்தில் ஹிந்தியில் எழுதப்போய் தான் அழிக்க சென்றார்கள். முதலமைச்சர் டுவீட் செய்தார். தூங்கிக் கொண்டிருந்த சர்க்கார் விழித்துக்கொண்டது.

மக்கள் மனதில் எங்கள் முதல்வர் வீற்றிருக்கிறார். மக்களோடு மக்களாக இருக்கும் நாங்கள் தேவையில்லாத பொருளை கையில் எடுத்து விளம்பரம் தேடவேண்டிய அவசியம் இல்லை. அண்ணாவைப் பற்றி திமுக அமைச்சர்களுக்கு 10 வரிகள்கூட எழுத தெரியாது, அண்ணா என்ற பசுவின் மீது அமர்ந்திருக்கும் காகம் போல தான் திமுக என அண்ணாமலை பேசியுள்ளாரே? அண்ணாமலைக்கும் இந்த தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவர் எப்போதாவது ஒருமுறை தனது இருப்பைக் காட்டிக்கொள்ள எதிர்மறையாக பேசிக்கொண்டிருக்கிறார். இதை தவிர்த்து அவர் தமிழ்நாட்டிற்கு என்று ஏதாவது செய்திருக்கிறாரா? இந்த மக்களுக்காக இந்த மக்களின் தேவையை அறிந்தவரா புரிந்தவரா அவர் கேள்விக்கு நான் பதில் சொல்வதற்கு? இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

Related Stories: