கட்சி வேட்டி, துண்டு உற்பத்தி ஆர்டர்களால் களைகட்டும் திருப்பூர் விசைத்தறி கூடங்கள்

 

திருப்பூர்: சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்சி வேட்டி, துண்டு உற்பத்தி ஆர்டர்களால் திருப்பூர் விசைத்தறி கூடங்கள் களைகட்டுகின்றன. பின்னலாடை நகரமான திருப்பூரில் பனியன் உற்பத்திகள் மட்டுமின்றி மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளான அவிநாசி, குன்னத்தூர், தெக்கலூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறிகளும் அதிகளவில் இயங்கி வருகிறது. வழக்கமாக விசைத்தறியில் காடா துணிகள் மட்டுமே அதிகளவில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல், நெருங்கி வரக்கூடிய சூழலில், அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ், நாம் தமிழர் மற்றும் தவெக சார்பில் தமிழக முழுவதும் பிரசாரங்கள் பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற பிரசாரங்களுக்கு கட்சி தொண்டர்கள் கட்சி கொடி வண்ணத்தில் ஆன துண்டுகள் மற்றும் கட்சி கரை வேட்டிகள் சேலைகள் ஆகியவற்றை அணிந்து வருகின்றனர். கட்சியினருக்கு தங்கள் தொண்டர்களுக்கு நேரடியாக இதை வழங்குவதும் தொண்டர்களும் விருப்பப்பட்டு கடைகளில் வாங்குவதுமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பல்வேறு கட்சியினர் மற்றும் விற்பனையாளர்களும் இதற்கு ஆர்டரும் கொடுத்துள்னனர்.

இதனை கருத்தில் கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு விசைத்தறிக்கூடங்கள் கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கட்சிகளின் துண்டுகள், வேட்டிகள் சேலைகள் உள்ளிட்டவைகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திருப்பூர் அடுத்த குன்னத்தூர், வெள்ளிரவெளி, பல்லகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான விசைத்தறிக்கூடங்களில் அரசியல் கட்சி துண்டுகள் மற்றும் வேட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திமுக, அதிமுக பாஜ உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வண்ணங்களில் சுமார் ஒரு லட்சம் மீட்டர் துண்டு தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் இதற்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விசைத்தறி கூடங்களில் தயாராகி வெளிவரும் கட்சி துண்டுகள், வேட்டிகள், சின்னங்கள் குறித்த சேலைகள் திருப்பூர் மாநகருக்குள் மொத்த விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் கட்சி துண்டுகள் இங்கிருந்து தமிழகம் முழுவதும் நடக்கும் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கும் விற்பனைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

Related Stories: