அயோத்தியாபட்டணம், பிப்.10: சேலம் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் 11 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்களும், உதவி இயக்குனர் பணியிடமும் காலியாக உள்ளதால், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், ஜலகண்டாபுரம், கன்னங்குறிச்சி, ஆட்டையாம்பட்டி, கொங்கணாபுரம், மேச்சேரி, ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம், தம்மம்பட்டி, தாரமங்கலம், வாழப்பாடி, வீரக்கல்புதூர், இடங்கணாசாலை, இளம்பிள்ளை, கெங்கவல்லி, காடையாம்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி, செந்தாரப்பட்டி, தெடாவூர், தேவூர், பூலாம்பட்டி உள்பட 33 பேரூராட்சிகள் உள்ளன. கொரோனா தொற்று பரவல் தருணத்தில், நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பேரூராட்சி செயலாளர்களும் முனைப்போடு பணியாற்றினர். அப்போது மேச்சேரியில் பணிபுரிந்த செயல் அலுவலர் ஜலேந்திரன் உயிரிழந்தார்.
சேலம் மண்டல பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த கனகராஜ், மருத்துவ விடுப்பில் சென்றதையடுத்து, இதே அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வரும் கணேசமூர்த்திக்கு உதவி இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் பொறுப்பேற்ற பின்பு, மேச்சேரி மற்றும் தாரமங்கலம், பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர்கள், துறை ரீதியான நடவடிக்கையின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், இந்த 3 பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடங்களும் காலியானது. இந்நிலையில், ஓமலூர், கன்னங்குறிச்சி, கீரிப்பட்டி, வீரக்கல்புதூர், வாழப்பாடி, செந்தாரப்பட்டி ஆகிய 6 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் வேலூர், காஞ்சிபுரம், தேனி, கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசிராமணி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடங்கள் ஏற்கனவே காலியாக உள்ளது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 33 பேரூராட்சிகளில், 11 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், இந்த பேரூராட்சிகளில் சாலைகள், கழிவுநீர் சாக்கடைகள், தெருவிளக்கு, குடிநீர் குழாய்கள், வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உதவி இயக்குநர் அலுவலகத்திலும் ஏராளமான கோப்புகளும், திட்டப்பணிகளும் முழுவடிவம் பெறாமல் தேங்கி கிடப்பதால், பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, காலியாக உள்ள பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடங்கள் மற்றும் உதவி இயக்குநர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, தேங்கி கிடக்கும் கோப்புகள் மற்றும் திட்டபணிகளை விரைந்து முடிக்க வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
