×

வேலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக நடந்த கணக்கெடுப்பில் நிலப்பரப்பில் வாழும் 110 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

*வனத்துறையினர் தகவல்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக நடந்த நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பில் 110 பறவை இனங்கள் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அரிய வகை பறவைகள் உட்பட அனைத்து பறவைகள், வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறை, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பறவை இனம் கண்டறிபவர்களால் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள், இதர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் என்று 2 வகையாக கணக்கெடுப்பை நடத்துகின்றனர்.

அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள வனக்கோட்டங்களில் கடந்த டிசம்பர் 27, 28ம் தேதிகளில் ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் நீர்நிலைகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தி முடித்தனர். இதற்கிடையில், கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதி தமிழ்நாட்டில் முதல் முறையாக இரையாடி பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்தது.

இதில் வேலூர் மாவட்டத்தில் 92 வகையான இரையாடி பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தாக வனத்துறையினர் தெரிவித்தனர்.இதையடுத்து, 2ம் கட்டமாக நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பிப்ரவரி 14, 15ம் தேதிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கடந்த 14, 15ம் தேதிகளில் 25 இடங்களில் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. ஒவ்வொரு இடங்களிலும் பறவைகள் குறித்து விவரங்கள் அறிந்த தலா ஒரு ஆர்வலர்கள், சுமார் 3 வன ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பில் வேலூர் மாவட்டத்தில் 110 பறவை இனங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் கடந்த 14, 15ம் தேதிகளில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்து 25 இடங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. இப்பணியின் போது, வனத்துறை ஊழியர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், பறவைகள் இனம் கண்டறிபவர்கள், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள், காப்புக்காடு, ஊர்புறங்களில் காணும் பறவைகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்தும், வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது, முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 110 பறவை இனங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த பறவை இனங்களில் சுமார் 4,500 பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது’ என்றனர்.

Tags : Vellore district ,Forest Department ,Vellore ,
× RELATED கோவில்பட்டி அருகே தீப்பெட்டி...