×

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் வரத்து அதிகரிப்பால் துவரை விலை சரிவு

*போட்டி போட்டு வாங்கி சென்ற மக்கள்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி வாரச்சந்தையில் துவரை வரத்து அதிகரித்ததால், விலை சரிந்தது. இதனை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரியாகவும், ஊடு பயிராகவும் பயறு வகை பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

போச்சம்பள்ளி, மத்தூர், ஒலப்பட்டி, ஆனந்தூர், சாமல்பட்டி, கொடமாண்டப்பட்டி, பாளேத்தோட்டம், குள்ளம்பட்டி, சந்தம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் துவரை சாகுபடி செய்துள்ளனர்.

இங்கு விளையும் துவரை, போச்சம்பள்ளி வாரச்சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. நடப்பாண்டு துவரை விளைச்சல் குறைவால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். சில வாரங்களுக்கு முன், ஒரு கிலோ துவரை ரூ.110 முதல் ரூ.120வரை விற்பனை செய்யப்பட்டது.

நேற்று கூடிய வாரச்சந்தையில் வரத்து அதிகரித்தது. இதனால், ஒரு கிலோ துவரை ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்தாண்டை காட்டிலும், நேற்று கூடிய சந்தையில், சுமார் 25 டன் துவரை விற்பனையானது.

விலை குறைந்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இது குறித்து விவசாய சங்க தலைவர் வரதராஜன் கூறுகையில், `துவரை சாகுபடி செய்ய, ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

நடப்பாண்டு கடும் பனிப்பொழிவு காரணமாக, 80 சதவீத பூக்கள் உதிர்ந்து, துவரை விளைச்சல் பாதிக்கப்பட்டு, ஏக்கருக்கு 100 கிலோ முதல் 200 கிலோ வரை மட்டுமே மகசூல் கிடைத்தது. கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு கிலோ துவரை ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

வரத்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று சந்தையில் கிலோ துவரை ரூ.100க்கு விற்பனையானது. வேறு வழியின்றி வந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டி உள்ளது,’ என்றார்.

Tags : Pochampally ,Krishnagiri district ,
× RELATED கோவில்பட்டி அருகே தீப்பெட்டி...