×

ஓமன் அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் டிரோன் தாக்குதல் எண்ணெய் கப்பலில் தீ: 15 இந்தியர்கள் உட்பட 20 மாலுமிகள் மீட்பு

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு தாக்குதல்களை தொடர்ந்து, வளைகுடாவின் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்த கப்பல் போக்குவரத்தையும் அனுமதிக்க முடியாது என்று ஈரான் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஸ்கைலைட் என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஓமன் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த டேங்கர் கப்பல் டிரோன் தாக்குதலுக்கு ஆளானது. இதில் டேங்கர் கப்பல் தீபிடித்து எரிய துவங்கியது.

இந்த தாக்குதலில் கப்பலில் இருந்து 4 மாலுமிகள் காயமடைந்தனர். இதையடுத்து, பாதுகாப்பு கருதி கப்பலில் இருந்த 20 மாலுமிகளும் ஓமன் கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் 15 பேர் இந்தியர்கள், 5 பேர் ஈரானியர்கள். காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சேர்க்கபபட்டனர். ஈரானின் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு கப்பல்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா அருகே கப்பல்கள் பின்வாங்குவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. ஜெர்மன் கப்பல் நிறுவனமான ஹபாக்-லாய்ட் ஹார்முஸ் வழியாக போக்குவரத்தை நிறுத்தி வைப்பதாக கூறியது. குறைந்தது 14 இயற்கை எரிவாயு டேங்கர் கப்பல்கள் நடுக்கடலில் நின்றுவிட்டன அல்லது திரும்பிவிட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே காப்பீட்டு நிறுவனங்கள் இந்தப் பகுதியில் பயணம் மேற்கொள்ளும் கப்பல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு தர முடியாது என்று அறிவித்துள்ளன.

Tags : Strait of Hormuz ,Oman ,Indians ,Iran ,Gulf ,Skylight ,
× RELATED ஈரான் மீதான தாக்குதல்; தலைவர்கள் கண்டனம்