×

யார் இந்த அயதுல்லா கமேனி; கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் பற்றிய பின்னணி தகவல்கள்

முன்பு பாரசீகம் என்று அழைக்கப்பட்ட பகுதிதான் இன்றைய ஈரான். சுமார் 16.5 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 9.25 கோடி. உலகின் மொத்த கச்சா எண்ணெய் இருப்பில் மூன்றில் இரண்டு பங்கு இருப்பது ஈரானில்தான். ஷா மன்னர்கள் ஆட்சி செய்த ஈரானில் மற்ற இஸ்லாமிய நாடுகளை போல் இல்லாமல் 1960களில் பெண்களுக்கு வாக்குரிமை, எழுத்தறிவு என்று புரட்சி பாதையில் சென்றது.

இது இஸ்லாமிய மதவாதிகளுக்கு கடுப்பை ஏற்படுத்தியது. எதிர்ப்பு குரல் எழுப்ப துவங்கினர். இதில் முன்னணியில் இருந்தவர் இந்திய வம்சாவளி ரூகொல்லா கொமெனி. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 1978 டிசம்பரில் ராணுவ புரட்சி மூலம் மன்னர் ஷாவின் அரசுக்கு முடிவுரை எழுதப்பட்டது. பின்னர் ஈரானின் அரசியல், மத உச்ச தலைவராக கொமெனி நியமிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் இஸ்லாமிய மத சட்டம் அமலுக்கு வந்தது. அதுவரை மேற்கத்திய உடை உடுத்தி வந்த ஈரான் பெண்கள் புர்கா அணிவது கட்டாயமானது. மதுபானங்களுக்கு தடை, மேற்கத்திய இசை கேட்கவே தடை வந்தது. இஸ்லாமிய சட்டப்படி தண்டனைகள் அமல்படுத்தப்பட்டன. கொமெனி அரசில் துணை ராணுவ அமைச்சராக பதவி வகித்தவர்தான் தற்போது கொல்லப்பட்டுள்ள அயதுல்லா கமேனி. கொமேனிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கமேனி, சிறிது காலத்தில் டெஹ்ரானின் இமாமானார்.

இதற்கிடையே 1979 அக்டோபரில் அமெரிக்காவில் தஞ்சமடைந்த மன்னர் ஷாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கொமெனி விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது. விளைவு அமெரிக்காவுக்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிட்டார் கொமெனி. 1979 நவம்பர் 8ம் தேதி டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் புகுந்த ஆயுதமேந்திய மாணவர்கள் அங்கிருந்த அமெரிக்கர்கள் 52 பேரை 44 நாட்களுக்கு சிறைபிடித்தனர். இது கொமெனி தலைமையிலான ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவை கசந்து போக செய்தது.

அன்று ஏற்பட்ட மோதல் தற்போது வரை தொடர்கிறது. 1980 செப்டம்பரில் ஈரான் மீது ஈராக் போர்தொடுத்தது. எட்டரை ஆண்டுகள் நீடித்த இந்த போரில் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். உலகெங்கும் தலைப்பு செய்தியில் இடம் பிடித்த கொமெனி 1989 ஜூனில் காலமானார். இதையடுத்து ஈரானின் உச்ச தலைவர் பதவிக்கு வந்தார் அயதுல்லா கமேனி. ஈரான் நாட்டு நிர்வாகம், நீதித்துறை, ராணுவம், செய்தித்தொடர்பு, ஊடகம் மற்றும் நாடாளுமன்றத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவராக கமேனி இருந்தார்.

ஈரானை பொறுத்தவரை அயதுல்லா கமேனி சொல்வதுதான் சட்டமாக இருந்தது. வெளியுறவு, வர்த்தகம் உள்ளிட்ட நாட்டின் எல்லா விவகாரத்திலும் இறுதி முடிவு அவரது கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அதிபர், அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவது அவரது வாடிக்கை. இப்படித்தான் தேர்தலில் அதிபரை தேர்வு செய்தாலும், அதிலும் ஈரானில் தில்லுமுல்லு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இவரது கைப்பாவையாக உள்ள ஒருவர்தான் அடுத்தடுத்த தேர்தல்களில் அதிபராக பதவி ஏற்றனர்.

தில்லுமுல்லு புகார்கள் எழுந்தாலும் கமேனி நிர்வாகம் அதை கண்டுகொள்ளாது. ஒரு தேர்தலில் 7 ஆயிரம் வேட்பாளர்களை கமேனியே தகுதியிழப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முற்பட்டதும் இவரது ஆட்சி காலத்தில்தான். இதனால், அணுகுண்டு தயாரிக்கப் போகிறார்கள் என்று கூறி ஈரான் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்தது. இயற்கை வளங்கள் நிறைந்த நாடான ஈரான், மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக, மிகை பணவீக்கம், வளர்ச்சி தடை மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது.

ஈரானுக்கும், உலக வல்லரசுகளுக்கும் இடையிலான 2015 ஒப்பந்தம், டெஹ்ரானுக்கு உலகளாவிய பொருளாதார நீரோட்டத்தில் நுழைந்து தன்னை மீண்டும் கட்டியெழுப்ப சிறந்த வாய்ப்பாக இருந்தது. ஆனால் பின்னர் டொனால்ட் டிரம்ப் களத்தில் இறங்கினார். 2018இல், டிரம்ப், தனது முதலாவது பதவிக்காலத்தில், 2015 ஒப்பந்தத்தை ரத்து செய்து ஈரான் மீது மீண்டும் தடைகளை விதித்தார். அன்றிலிருந்து, உள்நாட்டில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்தது.

பின்னர், அக்டோபர் 7 2023 அன்று ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் காசாவை தாக்கி அழித்தது. இதைத்தடுக்க கமேனியால் முடியவில்லை. சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இதையடுத்து, ஜூன் 13, 2025 அன்று இஸ்ரேல் ஈரானை தாக்கியது. இந்த போரில் ஈரானின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. அப்போது, கமேனிக்கு இஸ்ரேல் வைத்த குறி தப்பிவிட்டது. ஆனால், இந்த முறை அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கமேனியின் கதையை முடித்துவிட்டனர்.

* வெளிநாட்டு பயணத்தை தவிர்த்த கமேனி
ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா கமேனி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதில்லை. வெளிநாட்டு தலைவர்கள் யாராவது அவரை சந்திக்க விரும்பினால், அவர்கள் ஈரான் வந்தால்தான் பார்க்க முடியும். முன்பு 1981 முதல் 1989 வரை அதிபராக இருந்தபோது ஒருமுறை லிபியாவுக்கு மட்டும் கமேனி சென்றுள்ளார்.

* 4 மகன், 2 மகள்கள்
1939 ஏப்ரல் 19ம் தேதி ஈரானின் மஸ்காத் நகரில் இஸ்லாமிய மதகுரு ஜாவித் கமேனிக்கு மகனாக பிறந்தார் அயதுல்லா கமேனி. இவருடன் பிறந்தவர்கள் 8 பேர். தனது 4வது வயதிலேயே குரான் பயில ஆரம்பித்த அவர், இஸ்லாமிய மதம் குறித்த மேல் படிப்பை முடித்துள்ளார். 1964ல் மன்சூர் பகர்ஜாதாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு முஸ்தபா, மோஜ்தாபா, மசூத், மேசம் ஆகிய 4 மகன்களும், போஸ்ரா, ஹோடா ஆகிய மகள்களும் உள்ளனர்.

* 1981ல் நடந்த கொலை முயற்சி
ஜூன் 1981இல், டெஹ்ரானின் அபூசர் மசூதியில் ஒரு டேப் ரெக்கார்டர் குண்டு வெடித்ததில் அயதுல்லா கமேனி படுகாயமடைந்தார். அவரது வலது கை செயலிழந்தது, வலது காது கேட்கும் திறன் இழந்தது. ‘‘எனக்கு அந்த கை தேவையில்லை; என் மூளையும் நாக்கும் வேலை செய்தால் போதும்” என்று கமேனி ஒருமுறை தாக்குதலைப் பற்றி கூறினார்.

* உலக தலைவர்கள் கண்டனம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வௌியிட்ட அறிக்கையில், “ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த கொலை சர்வதேச சட்டம் மற்றும் மனித அறநெறிகளை அப்பாட்டமாக மீறும் செயல்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீனா வௌியுறவு அமைச்சர் வாங்க் ஈ வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இறையாண்மை கொண்ட ஈரான் நாட்டின் தலைவர் ஒருவரை வௌிப்படையாக கொல்வதும், அதன் மூலம் அந்நாட்டில் ஆட்சி மாற்றத்தை தூண்டுவதும் ஏற்று கொள்ள முடியாதது. இந்த செயலை சீனா கடுமையாக எதிர்க்கிறது, கண்டிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியா வௌியிட்டுள்ள கண்டன செய்தியில், “ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கை. அமெரிக்காவும், அதன் கூட்டாளியும் தங்களின் சுயநல மற்றும் மேலாதிக்க விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள ராணுவ பலத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளன. இது வெட்கமற்ற, குண்டர் கும்பல் போன்ற நடத்தை” என தெரிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்கு நியூயார்க் மேயர் ஜோரன் மம்தானியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Ayatollah Khamenei ,Supreme Leader of ,Iran ,Persia ,
× RELATED ஈரான் மீதான தாக்குதல்; தலைவர்கள் கண்டனம்