×

கமேனியின் கடைசி நிமிடங்கள்; போட்டுக்கொடுத்த சிஐஏ: அடுத்தடுத்து 30 ஏவுகணைகள் வீசிய இஸ்ரேல்

36 ஆண்டுகள் இரும்புப் பிடியுடன் ஈரான் நாட்டை ஆட்சி செய்த அயதுல்லா கமேனியை அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு சேர்ந்து கொன்றது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. கமேனியின் கடைசி நிமிடங்கள் குறித்த விவரங்கள் வருமாறு: கமேனியை தீர்த்து கட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கமேனி மற்றும் அவரது ஈரான் அமைச்சர்கள், மூத்த ராணுவ தலைவர்களின் நடமாட்டம் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து அமெரிக்காவின் சிஐஏ, மற்றும் இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புகளின் ஏஜென்டுகளால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன. அதே நேரத்தில் உலகை திசைதிருப்புவதற்காக ஈரானுடன் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தையும் அமெரிக்கா அரங்கேற்றி வந்துள்ளது.

பிப்ரவரி 28 மாலை தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு வளாகத்தில் முக்கிய அரசு, ராணுவ அதிகாரிகளை உச்ச தலைவர் கமேனி சந்திக்க உள்ளதாக சிஐஏக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அந்த வீட்டின் மீது மாலையில் தாக்குதல் நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டுள்ளன. ஆனால், கடைசி நேரத்தில் காலையிலேயே கூட்டம் நடத்தப்பட இருப்பது சிஐஏக்கு தெரியவந்தது. இது பற்றிய உளவு தகவல் உடனடியாக இஸ்ரேலுக்கு தரப்பட்டுள்ளது.

இதையடுத்து, உடனடியாக கூட்டம் நடைபெறும் இடத்தை தகர்க்க இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் விரைந்துள்ளன. காலை 6 மணியளவில் இந்த நடவடிக்கை தொடங்கியது, இஸ்ரேலிய விமானப்படை ஜெட் விமானங்கள் ஏவிய நீண்ட தூர ஏவுகணைகள், சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கமேனி இருந்த வளாகத்தை தாக்கி உள்ளன.

மூத்த ஈரானிய தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் வளாகத்தில் ஒரு கட்டிடத்தில் இருந்தனர், மேலும் கமேனி அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் இருந்தார். அந்த வளாகம் அடுத்தடுத்து 30 ஏவுகணைகள் வீசப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், கமேனி அவரது மகள், மருமகன், பேத்தி முதலில் பலியானார்கள். அடுத்த கட்டிடத்தில் இருந்த 40 ராணுவ அமைச்சர் மற்றும் ராணுவ-அரசு உயர் அதிகாரிகளும் அடுத்த ஒரு நிமிடத்துக்குள் கொல்லப்பட்டனர்.

இது பற்றி அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம், ‘‘துல்லியமான ராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் கீழ் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய ஒரு துல்லியமான, பெரிய அளவிலான நடவடிக்கையில் கமேனி கொல்லப்பட்டார். ஈரானிய பாதுகாப்புத் தலைமையின் மிக உயர்ந்த பதவியில் இருந்த மூத்த ராணுவ அதிகாரிகளில் பெரும்பாலோர் அழிக்கப்பட்டுவிட்டனர் என தெரிவித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறையின் பங்களிப்பு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

* பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நீடிக்கும் நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் அரசு தொலைக்காட்சியில் பேசினார். அப்போது, “அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் சிவப்பு கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி விட்டன. அதன் தலைவர்கள் மிகவும் இழிந்த குற்றவாளிகள். இஸ்லாமிய குடியரசு மீதான உங்களின் தாக்குதல்களுக்கு நீங்கள் உரிய விலையை கொடுக்க நேரிடும்.

நாங்கள் அத்தகைய பதிலடி தாக்குதல்களை நடத்தும்போது நீங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்” என காட்டமாக கூறினார். இந்தியாவில் உள்ள வௌிநாட்டு பயணிகள் விசாவை நீட்டித்து கொள்ள அறிவுறுத்தல்
மத்தியகிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து இந்தியாவில் உள்ள வௌிநாட்டு பயணிகள் விசாவை நீட்டித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* கமேனி கொல்லப்பட்டதற்கு கண்டனம்: காஷ்மீரில் போராட்டம்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஸ்ரீநகர், லால் சவுக், சைதா கடல், புத்காம், பந்திபோரா, அனந்த்நாக் மற்றும் புல்வாமா ஆகிய இடங்களில் நடந்த போராட்டத்தில், அமைதியான முறையில் ஊர்வலமாக சென்று, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதேபோல் உ.பி மாநிலம் லக்னோவிலும் போராட்டம் நடந்தது. அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

* ஐநா கடும் கண்டனம்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களில் 15 நாடுகளை உள்ளடக்கிய ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நேற்று கூடியது. இதில் பேசிய ஐநா பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “ பஹ்ரைன், ஈரான், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் இறையாண்மை மற்றும் பிாந்திய ஒருமைப்பாட்டை மீறும் ஈரானின் தாக்குதல்களும், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய ராணுவ தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கது.

சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு தற்போது கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது உலகின் மிக கொந்தளிப்பான பிராந்தியத்தில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத சங்கிலி தொடர் நிகழ்வுகளை ஏற்படுத்தும் அபாயத்தை இந்த ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கும், உலகிற்கும் இப்போது அமைதியான ஒரு வழி தேவை. பதற்றங்களை குறைத்து, விரோதங்களை உடனே நிறுத்த வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

Tags : Khamenei ,CIA ,Israel ,US ,Ayatollah Khamenei ,Iran ,
× RELATED ஈரான் மீதான தாக்குதல்; தலைவர்கள் கண்டனம்