×

மத்திய கிழக்கு விமான நிலையங்கள் மூடல் லட்சக்கணக்கான பயணிகள் சிக்கி தவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து மத்திய கிழக்கில் உள்ள கத்தார், சிரியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். மோதல் இரண்டாவது நாளாக நடந்ததால், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாய்க்கு செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் நிறுத்தியது.

கத்தார் விமான நிலையம் திங்கள் கிழமை(இன்று) காலை வரை மூடப்படுவதாக கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.  விமான நிலையங்கள் மூடல்களினால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. துபாய், அபுதாபி மற்றும் தோஹாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன. மேலும் முக்கிய மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் 1,800 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன.

அந்த விமான நிலையங்களில் இயங்கும் மூன்று முக்கிய விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் எதிஹாத் ஆகியவை பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 90,000 பயணிகளை இந்த விமான நிலையங்களில் இருந்து ஏற்றி செல்கின்றன. மேலும் இன்னும் அதிகளவு பயணிகள் மத்திய கிழக்கில் உள்ள இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என விமான போக்குவரத்து ஆய்வு நிறுவனமான சிரியம் தெரிவித்துள்ளது.

* 200 விமானங்கள் 1200 குண்டுகள்
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 200 போர் விமானங்கள் மூலம் 1200 குண்டுகள், ஏவுகணைகளை ஈரான் மீது வீசி தாக்குதல் நடத்தினோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பள்ளி குண்டுவீச்சில் பலி 148 ஆக உயர்வு
ஈரானில் உள்ள மினாப் நகரில் உள்ள பெண்கள் பள்ளி மீது நேற்று முன்தினம் குண்டு வீசப்பட்டது. இதில், 53 மாணவிகள் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. தற்போது, 148 மாணவிகள் பலியானதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

* இந்தியாவில் 350 சர்வதேச விமானங்கள் ரத்து
வளைகுடா பகுதியில் போர் பதற்றம் நீடிப்பதால், அங்குள்ள பெரும்பாலான நாடுகள் தங்கள் வான் எல்லை மூடப்பட்டதாக அறிவித்துள்ளன. இதனால், நேற்றுமட்டும் இந்தியாவில் இருந்து புறப்படும் சுமார் 350 சர்வதேச விமானங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா நிறுவனம் லண்டன், நியூயார்க், பாரிஸ், சிகாகோ, டொராண்டோ மற்றும் பிராங்க்பர்ட் உள்ளிட்ட நகரங்களுக்கான 50 நீண்ட தூர விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் , இண்டிகோ நிறுவனம் வளைகுடா வழியாக செல்லும் விமானங்களை இயக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் தவித்து வருகின்றனர்.

Tags : Middle East ,Eastern ,Qatar ,Syria ,Iran ,Iraq ,Kuwait ,Bahrain ,US ,Israel ,
× RELATED ஈரான் மீதான தாக்குதல்; தலைவர்கள் கண்டனம்