- ஈரான்
- துபாய் விமான நிலையம்
- ப.
- சென்னை
- இஸ்ரேல்
- வீரகாந்தன்
- இந்தியா
- பிவி சிந்து
- துபாய்
- ஐக்கிய மாநிலங்கள்
- அமெரிக்கா
சென்னை: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, துபாயிலிருந்து வெளியேற முடியாமல் 8 மணி நேரம் தவித்ததாக கூறியுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவ தாக்குதலை அடுத்து, அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் துபாயிலிருந்து, ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்க பர்மிங்காம் செல்ல, இந்தியாவை சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து விமான நிலையத்தில் காத்திருந்தார். ஆனால், ஈரானில் இருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டதால் துபாயில் இருந்து விமானங்கள் புறப்படவில்லை. 8 மணி நேரம் காத்திருந்தும் விமானங்கள் செல்லாததால், விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு சிந்து தள்ளப்பட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
‘துபாயில் இருந்து விமானங்கள் புறப்படாததால் 8 மணி நேரமாக விமான நிலையத்திலேயே காத்திருக்கிறோம். சில மணி நேரங்கள் முன்பு, விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்த சத்தம் கேட்டது. எனது பயிற்சியாளர் அந்த இடத்துக்கு சற்று தொலைவில் இருந்துள்ளார். புகை மண்டலமாக எழுந்த நிலையில் அங்கிருந்து தப்பி பாதுகாப்பான இடத்துக்கு அவர் வந்தார். அந்த நொடிகள் மிகவும் பயங்கரமானதாக இருந்தன. தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு உதவிய துபாய் விமான நிலைய அதிகாரிகளுக்கும், இந்திய துாதரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறியுள்ளார்.
