- திருமலா
- ரவி
- ராஜமகேந்திரவரம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
- ஸ்ரீதேவி
- பிரபாகர்
- ரியாத், சவுதி அரேபியா
திருமலை: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்தவர் ரவி(49). இவரது மனைவி ஸ்ரீதேவி(43). மகன் பிரபாகர். இவர்கள் சவுதிஅரேபியா ரியாத்தில் வசித்து வந்தனர். பிளஸ் 2 படித்து வந்த பிரபாகரை, தொடர்ந்து படிக்கும்படி வற்புறுத்திய பெற்றோரை கடந்த 26ம்தேதி பிரபாகர் கொன்றுவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக ஆந்திராவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதை ஏற்க அவர்கள் மறுத்தனர். ரவி, ஸ்ரீதேவி, பிரபாகரை யாரோ மர்ம நபர்கள் கொன்றுவிட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதுபற்றிய விவரம்: ரவி, ரியாத்தில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் மூத்த நெட்வொர்க் பொறியாளராக பணியாற்றி வந்தார். ஸ்ரீதேவி அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். பிரபாகரும் அவரது தாயார் பணியாற்றும் பள்ளியில் படித்து வந்தார். தற்போது ஆண்டு தேர்வு எழுதி வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் ஜோர்டானை சேர்ந்த ஒரு மாணவியும் பிரபாகரும் காதலித்துள்ளனர். இருவரும் பல இடங்களுக்கு சென்று ஒன்றாக புகைப்படங்கள் எடுத்துள்ளனர். பின்னர் அந்தப்பெண் பிரபாகரை விட்டு விலகினார். இதனால் பிரபாகர், அந்த பெண் தன்னுடன் இருந்த புகைப்படங்களை பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பினார். தொடர்ந்து பெண்ணின் பெற்றோர், ரவியின் வீட்டிற்கு வந்து ரவி, ஸ்ரீதேவி, பிரபாகரை மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 26ம்தேதி அடையாளம் தெரியாத குற்றவாளிகள் வீடடிற்குள் நுழைந்து ரவியை 30க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியுள்ளனர். ஸ்ரீதேவியையும் குத்திக்கொலை செய்துள்ளனர். பின்னர் பிரபாகரை வேறு இடத்திற்கு அழைத்து சென்று ஒரு மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளனர். பிரபாகர் தனது பெற்றோரைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவலை பரப்பியுள்ளனர். உடல்களை பார்க்க இன்னும் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
இதுகுறித்து சவுதி அரசு முழு அளவிலான விசாரணை நடத்தி கொலைக்கு காரணமானவர்களை கண்டறிந்து, கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணம் காதல் பிரச்னையாக இருக்கலாம். இதுதொடர்பாக பிரபாகரின் வாட்ஸ்அப் சாட்டிங் விவரங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினால், அனைத்தும் வெளியாகும். அதேபோல் கொலையான 3 பேரின் சடலங்களை இந்தியாவுக்கு கொண்டு வர தூதரக அதிகாரிகள் எங்களுக்கு உதவி செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
