×

5 கிலோ மெத்தம்பெட்டமின் கடத்தல் 4 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல்

சென்னை: வளசரவாக்கம், விநாயகநகர் 2வது தெருவில் உள்ள வீட்டில் வசிக்கும் நபர்கள் மெத்தம்பெட்டமின் எனும் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த வீட்டினுள் சோதனை செய்தபோது, அங்கு சுத்திகரிக்கப்பட்ட ‘சீன தேநீர்’ என்று குறிப்பிட்டிருந்த ஐந்து பாக்கெட்டுகளில் 5 கிலோ மெத்தம்பெட்டமின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப்பொருள் கடத்திய இலங்கையைச் சேர்ந்த சிவரூபன் (46), அலெக்ஸாண்டர் (37), சுஜந்தன் (37) மற்றும் புழல் பகுதியைச் சேர்ந்த கோபால் (39) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை முதலாவது போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சிவரூபன், அலெக்ஸாண்டர், சுஜந்தன், கோபால் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : Chennai ,Central Drug Trafficking Prevention Unit ,2nd Street ,Valasaravakkam, Vinayakanagar ,
× RELATED பெற்றோரை கொன்று மகன் தற்கொலை...