சென்னை: பாரம்பரிய இந்திய ஆடைகளை நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் வழங்குவதில் புகழ்பெற்ற, இந்தியாவின் நம்பர் 1 பாரம்பரிய ஆடை பிராண்டான ராம்ராஜ் காட்டன், இப்போது ‘ஜமக்காளம்’ கலெக்ஷனை அறிமுகம் செய்கிறது. இந்த புதிய அறிமுகத்தின் மூலம் மக்கள் அணியக்கூடிய ஆடைகளில் மட்டுமல்லாமல், வீடுகளை அலங்கரிப்பதற்கான துறையிலும் ராம்ராஜ் அடியெடுத்து வைக்கிறது. எந்தவொரு பாரம்பரிய கைவினைக் கலையும் மக்களிடையே பெருமிதத்தையும், பெருமையையும் உருவாக்கும் போது மட்டுமே மீண்டும் முக்கியத்துவம் பெறும் என்று ராம்ராஜ் காட்டன் உறுதியாக நம்புகிறது.
அதனால், புதிய வண்ணங்கள், நவீன வடிவங்கள் மற்றும் ஜமக்காளப் பைகள் போன்ற பயன்பாட்டுப் பொருட்கள் மூலம் பாரம்பரியமான ஜமக்காளத்தில் புதுமைகளையும், நவீன அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய முயற்சியை வெறும் தயாரிப்பு பொருட்களுடன் நிறுத்தி விடாமல், ஜமக்காளத்தின் பாரம்பரியம் மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ராம்ராஜ் நிறுவனம் இரண்டு நூல்களையும் இத்தருணத்தில் வெளியிட்டுள்ளது. அமர் ரமேஷ் அவர்களின் “ஜமக்காளம்: பீப்பிள்ஸ் தறி ஆப் இந்தியா” என்ற சிறப்பு நூல், இந்த பாரம்பரிய கலையின் பயணம், இதை உருவாக்கும் நெசவாளர்கள் மற்றும் அதன் வரலாற்றை விரிவான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து, கரடி டேல்ஸ் வெளியிட்ட “ப்ரம் பவானி, வித் லவ்” மற்றும் அதன் தமிழ் பதிப்பான “அன்புடன், பவானி” என்ற விளக்க சித்திரங்கள் கொண்ட குழந்தைகள் நூலும் வெளியிடப்பட்டது. வி.லட்சுமி எழுதி, ஜெய்னப் தம்பாவாலாவின் அழகான சித்திரங்களை கொண்ட இந்த நூல், குழந்தைகளும் ஜமக்காளத்தை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும், பண்பாட்டு ரீதியாகவும் புரிந்துகொள்ளவும், பாராட்டவும் நமது பாரம்பரியத்தின் மீது பெருமை கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி குறித்து, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான கே.ஆர்.நாகராஜன் கூறுகையில், \”ராம்ராஜ் காட்டனில், எங்களது பயணம் எப்போதும் பண்பாடு மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு பவானி ஜமக்காளமும் ஒரு தறியின் தாளத்தையும், ஒரு சமூகத்தின் கதையையும் சுமந்து நிற்கிறது. பாரம்பரியம் என்பது வெறும் நினைவுகளாக மட்டும் இருந்து, படிப்படியாக மங்கி மறைந்து போகக்கூடாது என்று நாங்கள் உறுதியாக விரும்புகிறோம் மற்றும் நம்புகிறோம்.
ஜமக்காளத்தை தற்கால நவீன இல்லங்களுக்கு கொண்டு செல்வதன் வழியாகவும், அதன் பயணத்தை நூல்கள் வழியாக ஆவணப்படுத்துவதன் மூலமும், கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையே ஒரு பிணைப்பை நாங்கள் உருவாக்குகிறோம். நமது செழுமையான பாரம்பரியம், நவீன உலகில் தனக்கான இடத்தைப் பிடிக்கும்போது, அது வெறும் சிரமத்தோடு தாக்குப்பிடிப்பதோடு நின்று விடாமல், செழுமையான வளர்ச்சியைப் பெற்று, தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ளும்,” என்றார்.
