- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- அரசு கஸ்தூர்பா காந்தி தாய்வழி மற்றும்
- நலன்புரி மருத்துவமனை
- சென்னை
- அரசு கஸ்தூர்பா காந்தி தாய்வழி
- மற்றும் குழந்தை
- நலன்புரி மருத்துவமனை வளாகம்
- நலன்புரி
- மருத்துவமனை
சென்னை: அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை வளாகத்தில் ரூ.32.32 கோடி செலவில் கூடுதல் கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் சென்னை, சேப்பாக்கம் சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை வளாகத்தில் ரூ.32.32 கோடி செலவில் 66,658 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் உடன் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த கட்டடத்தின் தரைதளத்தில், அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த மாதிரி சேகரித்தல் மற்றும் ஆய்வகம், முதல் தளத்தில் பேறுகால கவனிப்பு அறைகள், பிரசவ அறைகள், பிரசவத்திற்கு பிந்தைய கவனிப்பு வசதி, சிசு கவனிப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் மறு உயிர்ப்பு, நோய் தொற்று தனி வார்டு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்குகள், துளைமூலம் அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு வசதிகள், தொடர் கண்காணிப்பு, மயக்கம் துய்த்தல், வலி நிவாரணம் போன்ற வசதிகளுடன் தாய்-சேய் நலம் காக்கும் வகையில் இந்த மருத்துவமனை கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
சென்னை, சேப்பாக்கம் சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை பெண்களுக்காக பெண்களால் கடந்த 141 ஆண்டுகளாக சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. 18 ஏப்ரல் 1921 அன்று மதராஸ் அரசு இந்த மருத்துவமனையின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது. மே 1948ல், இது அரசு கஸ்தூரிபா காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 695 படுக்கைகள் வசதி கொண்ட இந்த மருத்துவமனையில் பராமரிப்பு பிரிவு, பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி வசதி உடன், யூரோகைனகாலஜி, காது மூக்கு தொண்டை பிரிவு, குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
