- திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் கோவில்
- எண்டோமெண்ட்ஸ் துறை
- நீதிமன்றம்
- சென்னை
- இந்து சமய மற்றும் அறநிலையத் துறை
- சென்னை உயர் நீதிமன்றம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பி. பாஸ்கர்
- சென்னை உயர்நீதிமன்றம்…
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருநீர் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் ஏப்ரல் மாதத்திற்குள் சீர் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுவாஞ்சேரியை சேர்ந்த பி.பாஸ்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலையில் மிக பழமையான ரங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசிக்கிறார்கள். இந்த கோயிலில் உள்ள குளத்தில் பிரமோற்சவம், தீர்த்தவாரி உள்ளிட்ட பல்வேறு பூஜை, சடங்குகள் நடைபெறுகிறது.
ஆனால், இந்த குளம் தற்போது தூர்வாரப்படாமல் மிக மோசமாக உள்ளது. குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது, குப்பைகள், கண்ணாடி பாட்டில்கள் சேர்ந்துள்ளது. எனவே, கோயில் குளத்தை சரி செய்யுமாறு அறநிலைய துறைக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலைய தரப்பில் வழக்கறிஞர் கூடுதல் அரசு பிளீடர் கார்த்திகேயன் ஆஜரானார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.ஜெகநாத் ஆஜராகி, கோயில் குளத்தை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி குளத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களை தாக்கல் செய்தார்.
அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ஸ்ரீராம் ஆஜராகி, கோயில் குளத்தை தூர்வாரும் பணிக்கு டெண்டர் கோரப்பட்ட நிலையில் பக்தர் ஒருவர் ரூ.65 லட்சம் செலவில் பணிகளை தானே செய்து தருவதாக தெரிவித்துள்ளார். விரைவில் பணி தொடங்கப்பட்டு குளம் முழுவதும் சீர் செய்யப்படும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், குளம் தூர்வாரும் பணி தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்திருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் செயல் அதிகாரியின் அறிக்கையை சிறப்பு அரசு பிளீடர் தாக்கல் செய்தார். அதில், கோயில் குளத்தை சுத்தப்படுத்தி சீர் செய்வதற்கான பணிகள் ஜனவரி 7ம் தேதி தொடங்கப்பட்டது. பிப்ரவரி 12ம் தேதி நிலவரப்படி 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மொத்த பணிகளும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், கோயில் குளத்தை சீர் செய்யும் பணியை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
