- ப்ளூமிங்கோ இயந்திரம்
- பொறி
- மெட்ரோ
- சென்னை
- சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம்
- பாதை 4
- கலங்கரை விளக்கம்
- பூந்தமல்லி அதிவேக பாதை 26.1
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், 2ம் கட்ட திட்டத்தில் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டம் 2, வழித்தடம் 4ல் கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. நீளத்திற்கு வழித்தடம் அமைக்கப்படவுள்ளது.
இதில், யூஜி-1 ஒப்பந்தத்தின் கீழ், “பிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்திலிருந்து சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை நேற்று வந்தடைந்துள்ளது. இதற்கு முன்னதாக, இதே ஒப்பந்தத்தின் கீழ் “கழுகு” சுரங்கம் தோண்டும் இயந்திரம், கடந்த 9.2.2026 அன்று மேல்நிலைய சுரங்கப்பாதை அமைக்கும் பணியை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. சிமென்டேஷன் இந்தியா நிறுவனத்தால் 1,985 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த சுரங்க பணி சென்னையின் மிகவும் முக்கியமான மற்றும் நெரிசலான பகுதிகளின் வழியே செல்கிறது. குறிப்பாக சென்னை கலங்கரை விளக்கம், அகில இந்திய வானொலி நிலையம், ரஷ்ய தூதரகம், ரோசரி தேவாலயம் மற்றும் பறக்கும் ரயில் பாலம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான கட்டிடங்களுக்கு அடியில் வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது.
இந்தப் பணியின் போது, பாறை அடுக்குகள், இரண்டு சுரங்கங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப்பட்டதால் உருவான அதிகப்படியான ஆழம் மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட எரிவாயு கசிவு போன்ற சவாலான புவியியல் சூழல்களைக் கடந்து இந்தத் துளையிடும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த பகுதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கழுகு மற்றும் பிளமிங்கோ என பெயரிடப்பட்ட 2 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்தியது. இன்றைய மைல்கல் சாதனையின் மூலம், யூஜி-1 தொகுப்பின் கீழ் உள்ள கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை இடையேயான 2 சுரங்க பாதைகளும் தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த 2 இயந்திரங்களும், மயிலாப்பூரிலிருந்து போட் கிளப் நோக்கி அடுத்தகட்ட பணிகளுக்காக இயக்கப்பட உள்ளன என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் முரளி (நிதி), பொது மேலாளர் ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் குழு தலைவர் முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், சிமென்டேஷன் இந்தியா நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் மெட்ரோ நிறுவன ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.
