×

கேரள தேர்தலில் ஒன்றிய அமைச்சர் போட்டியா?

கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தான் பாஜ தங்களுடைய கணக்கை தொடங்கியது. திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள நேமம் தொகுதியில் பாஜவின் மூத்த தலைவரான ஓ.ராஜகோபால் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு கடந்த 2021 தேர்தலில் 30 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜ தலைவர்கள் சூளுரைத்தனர்.

ஆனால் கையில் இருந்த ஒரே ஒரு நேமம் தொகுதியும் பறிபோனது மட்டுமல்லாமல் பல தொகுதிகளில் டெபாசிட்டும் காலியானது. கடந்த முறையைப் போலவே இந்த தேர்தலிலும் 30க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 90 தொகுதிகளில் போட்டியிட பாஜ தீர்மானித்துள்ளது.

இதனால் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேமம் தொகுதியில் பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஒன்றிய இணை அமைச்சரான ஜார்ஜ் குரியனை கோட்டயம் மாவட்டம் காஞ்சிரப்பள்ளியில் நிறுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரது மேலவை எம்பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.

மீண்டும் அவருக்கு மேலவை எம்பி பதவி அளிக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இந்த முடிவில் இருந்து பாஜ மேலிடம் பின்வாங்கி இருப்பதாக தெரிகிறது. கடந்த தேர்தலில் காஞ்சிரப்பள்ளி தொகுதியில் பாஜவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன. ஜார்ஜ் குரியன் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இங்கு கிறிஸ்தவ வாக்குகள் அதிகமாக இருப்பதாலும் அவரை நிறுத்தினால் இந்தத் தொகுதியை கைப்பற்றிவிடலாம் என்று பாஜ கருதுகிறது.

Tags : Union Minister ,Kerala ,elections ,BJP ,2016 assembly elections ,O. Rajagopal ,Nemam constituency ,Thiruvananthapuram district ,
× RELATED வரும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை...